ஞாயிறு, 8 நவம்பர், 2020

தெரு ஓவியங்களும் மென்வலுவும் (soft power) கலாச்சார சாணக்கியமும்

https://www.ilakku.org/street-painting-soft-power-cultural-diplomacy/ 

தெரு ஓவியங்களும் மென்வலுவும் (soft power) கலாச்சார சாணக்கியமும் (cultural diplomacy) – பாகம் 2

  61 Views

அழகுகலைப் பண்புகள், கலாச்சார, பண்பாட்டு நுணுக்கங்கள் Joseph Nye குறிப்பிடுகின்ற மென்வலுவாக (soft power)  அடக்குமுறைக்கு எதிராக உள்வாங்கப்பட வேண்டிய தேவை சனநாயக வெளி மூடப்படுகின்ற சூழலில் எழுகின்றது. இவ்வெழுச்சி ஆக்கபூர்வமான அழிவினூடாகவும் முன்வைக்கப் படலாம்.  மேலாண்மை அடக்குமுறைச் சொல்லாடலை சமூகவியல், அரசியல், அழகியல், மானுடவியல், வரலாற்றியல் இன்னும் பிற தளங்களில் கட்டவிழ்ப்பது ஆக்கபூர்வமான அழிவாகக் கொள்ளப்படலாம். 

இதற்கான உந்துதல் பிக்காசோ குறிப்பிடுகின்ற ஆக்கபூர்வமான உந்துதலாக இருக்கலாம். ‘பிக்காசோ பலஸ்தீனத்தில்’ (Picasso in Palestine Project)’ என்ற செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தியவர்களின் அனுபவங்களிலிருந்து வாசிக்கின்ற போது, பிக்காசோவின் ஓவியம் பலஸ்தீனத்திற்கு எடுத்து வரப்பட்ட அனுபவம், அந்த ஓவியம் ஏற்படுத்திய அதிர்வலைகள், அதன் பின்னரான கொதிநிலை எல்லாமே அரசியல் சார்ந்தது. வெறுமனே அழகியல் சார்ந்தது மட்டுமல்ல. அடக்குமுறையைப் பிரதிபலிப்பதும், பிரதிநிதித்துவப் படுத்துவதற்குமான பொதுப்படிமம், குறியீடு.

அப்படிமம் இன ஒருங்கிணைப்பை, இனத்தால் அல்லது இன அடையாளத்தால் ஒடுக்குமுறைக்குள்ளாவதனால், ஒருங்கிணைப்படுகின்றோம் என்ற பொது அடையாளப்படுத்தலும், உரிமங் கொள்ளலும், பொது இயக்கமாதலும், பொது படிம மையத்தினை இயங்கு தளமாக்கிய வெளியும் அவசியமாகின்றது.

அழகியல் சாணக்கியம் (Aesthetic diplomacy) வடக்கு-கிழக்கைச் சார்ந்து அவதானிக்கின்ற போது, அரசு அல்லாத இயக்கியால் மட்டுமே உருவாக்கப்பட முடியும். (Non-State actor) அவ்வாறான இயக்கியின் இயங்குதளம் விளிம்புமையத் தந்திரோபாயத்தை கொண்டிருத்தல் அவசியமாகின்றது. Joseph Nyeயினுடைய மென்வலு பூகோளமயப்படுத்திய சந்தைப்படுத்தலை உத்தியாக பயன்படுத்துகின்றது.

அது பண்பாடு, விழுமியம், கலை இன்னும் பிற சார்ந்ததாக அமையலாம். Joseph Nye குறிப்பிடுகின்ற மென்வலு பின்வரும் மூன்று பண்புகளில் தங்கியிருப்பதாக கூறுகின்றார். கலாச்சாரம், அரசியல் விழுமியங்கள், வெளியுறவுக் கொள்கைகள் (பக்கம் 97). இதனூடான அணுகுமுறையும், தொடர் உறவாடலும் நீண்டகால இலக்குக் கொண்டது.

தெரு ஓவியங்களில் பிரதிபலிக்கும் கலாச்சார மேலாண்மை கொண்ட ஓவியங்கள் மேலாண்மை அடையாளக் கட்டமைப்பிற்கு மிக இன்றியமையாதவை. அடக்குமுறை சார்ந்து எழுகின்ற தெரு ஓவியங்களின் அடக்கப்படுகின்ற மக்களின் கலாச்சார மீளவெழுச்சியை முதன்மைப்படுத்துகின்ற, மீள உறுதிப்படுத்தி வலியுறுத்துகின்ற படிமங்கள் கலாச்சார சாணக்கியத்திற்கூடாக (Cultural diplomacy) தேசக் கட்டுமானத்திற்கு பங்களிப்புச் செய்கின்றது.

மிக அண்மைய காலங்களில் கலாச்சார சாணக்கியம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஏற்படுத்தவும், பலப்படுத்தவும் ஒரு கருவியாக உபயோகிக்கப்பட்டு வருகின்றது. கலாச்சார சாணக்கியம் தொடர்பான விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. சிலர் இதனை ஏகாதிபத்தியத்தின் சிந்தனைக்கரு முகமாக விபரிக்கின்றனர். அதிசக்தியுடைய அரச அல்லது அரசசார்பற்ற முகவர்களின், நாடுகளுக்கிடையிலான அல்லது நாடுகள் கடந்த நிலையிலான தொடர்புகளை முகாமைத்துவம் செய்வதைக் குறிக்கின்றது. நாடு கடந்த நிலையில் அரச, அரசசார்பற்ற முகவர்களுக்கு எங்களுடைய இலக்கினை எவ்வாறு கலாச்சார சாணக்கியத்துடனூடு மெய்மை உறைப்பித்தல் ஆய்வு செய்யப்பட வேண்யது. கலாச்சார சாணக்கியத்தில் அரச சார்பற்ற முகவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. மேற்குறிப்பிட்ட பங்களிப்பு பன்முகப்படுத்தப்படுவதில், குறிப்பாக மைய ஆட்சியை வலுத்தளர்த்துவதில் பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை. அது ஒரு வகையில் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான அரசியல் வரலாற்றுத் தளத்தில் தமிழினம் பட்டறிவுடன் கண்ட அனுபவம்.

மையம் தவிர்த்து பன்முகப்படுத்தப்பட்ட தந்திரோபாயத்தின் கூட்டு கட்டமைக்கப்பட்டமையால் பன்முகப்படுத்தப்பட்ட முகவர்களினால் கட்டமைக்கப்பட்ட இலக்குகள் தொடர்பிலும், அதன் அணுகுமுறை தொடர்பிலும் ஒன்றுக்கொன்று முரண்பாடான, மறுதலித்த புதிய யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முரண்பாட்டுப் பிரதிபலிப்பு எதிர்மறை விளைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தது. இவ்வாறான முரண்பாட்டுச் சூழலில் உருவான எதிர்மறை விளைவுகளை கட்டமைக்கக் கூடிய அரச சார்பற்ற முகவர்களின் செல்வாக்கு அதிகரித்து, அவர்கள் இலக்கிற்கு முற்றிலும் முரணான புதிய முகவர்களாக மாறியிருந்தனர் (Kelley 2010). மேற்குறிப்பிட்ட புதிய யதார்த்தத்திற்கு இணையத்தளப் பயன்பாடும், தொழிநுட்ப வளர்ச்சியும் காத்திரமான பங்களிப்பை ஆற்றியிருக்கின்றன. நாடு கடந்த ஆனால் கலாச்சாரங்களுக்கிடையே ஏற்படுத்தப்படும் தொடர்பாடல்கள், கலாச்சார சாணக்கியத்தின் தளத்தை இன்னும் விரிவாக்கின என்று கூறலாம்.

Joseph Nye யினுடைய ‘மென்வலு’ முன்வைப்புத் தொடர்பாக விமர்சனங்கள் நிறையவே எழுந்துள்ளன. ‘மென்வலுக்’ கருத்தாக்கம் அமெரிக்க உருவாக்கம் என்பது மட்டுமல்லாமல், ‘மென்வலுச்’ சொல்லாடல் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை சொல்லாடல்களுள் உள்வாங்கப்பட்டு, அது முற்போக்கான கருத்தியலாக ஏனைய நாடுகளிலும் விவாதத்திற்குட்படுத்தப்பட்டது. இச் சொல்லாடலின் பொருத்தப்பாடு அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளில் கேள்விக்குட்படுத்தப்பட்டது. அதற்கு மாற்றீடான சொல்லாக, உதாரணத்திற்கு ‘மாற்றத்திற்கான சக்தி’ (transformative power), சிவிலியன் சக்தி போன்றன மேற்குலக அரசியற் பரப்பில் முன்வைக்கப்பட்டது.

சீனாவின் அரசியற் பரப்பில் ‘மென்வலு’, ‘பண்பாட்டு வலுவாக’(culural power)) (A.Patalakh – 2018) மாற்றமடைந்தது. மென்வலுவினுடைய பிரதான பொறிமுறையாக ‘வசீகரம்’, ‘கவர்ச்சி’ (attraction)) இயங்குகின்றது. 2009இல் Joseph Nye முன்வைத்த மென்வலுவிற்கான முதன்மைக் காரணியாக ‘கவர்ச்சி’ அமைகின்றது. அது நாளடைவில் சிக்கலுக்குட்படுத்தப்பட்டது.

இராணுவ, பொருளாதார வலுவும் கவர்ச்சியானதாக இருக்கலாம் என்றதன் அடிப்படையில் (A.Patalakh 2015 unpublished) மீண்டும், கருத்தாய்வு மீள்வாசிப்பின் பின் 2011இல் பின்வருமாறு மீள் வரைவிலக்கப்படுத்துகின்றார். ‘ஒரு தனிநபர் விரும்பிய விளைவுகளைப் பெறுவதற்கு ஒத்துத் தேர்ந்தெடுத்தல் (Co-optive means) வழிமுறைகளைக் கையாளுதல், அவை நிகழ்ச்சி நிரல் கட்டமைப்பு, இணங்குவித்தல், நேர்மறைக்கவர்ச்சி (2011a.19) போன்றன. மேற்கூறப்பட்ட பண்புகளைக் கொண்ட சாணக்கியம் ‘வலுப்’ பின்புலம் அற்ற முகவர்களால் குறிப்பாக அரச சார்பற்ற முகவர்களால், நடைமுறைப்படுத்த முடியுமா என்பது சிக்கலுக்குரியது. வலுப் பின்புலத்தினூடு தான் நிகழ்ச்சித் திட்டமைப்பும், இணங்குவித்தலும் நடைமுறைச் சாத்தியமாகும். Antonio Gramsciயினுடைய மேலாதிக்கத்தன்மை (hegemony) பற்றிய புரிதல் அவசியமாகின்றது.

Joseph Nye தன்னுடைய எழுத்துக்களிலே ‘வன்வலு’ விற்கானதும் ‘மென்வலு’ விற்கானதுமான இடைவெளி அல்லது வித்தியாசம் குறித்து தெளிவின்மையைக் கொண்டிருந்தாலும், ஒரு தருணத்தில் ‘கொள்கை மையப்பார்வையில் ‘வன்வலு’, ‘மென்வலு’ விற்கிடையே உள்ள உறவு சிக்கலானது. சில வேளைகளில் இரண்டுமே ஒன்றையொன்று உறுதி செய்கின்றன. சில வேளைகளில் ஒன்றையொன்று விலக்குகின்றது. (Eg.20116, 22-23) அதனால் ‘வன்வலு’ வும் ‘மென்வலுவும்’ உள்ள வளங்களை இணைத்து ‘வினைத்திறன் மிக்க வலு’(Smart power) என்ற கருத்துருவாக்கத்தை முன் வைக்கின்றார்.

தெரு ஓவியமும் சனநாயகமும் 

தெரு ஓவியத்திற்கும், தெரிவு செய்யப்பட்ட அல்லது திட்டமிடப்பட்ட சொல்லாட்சிக்கும் (deliberative rhetoric) இடையிலான தொடர்பு முக்கியமானது. திட்டமிடப்பட்ட சொல்லாட்சி மக்களை ஒரு புதிய கோணத்தில் பார்க்க அழைப்பதோடு, அது தகவலையும், அறிவையும் கொடுக்கின்றது. அதன் விளைவாக ஆழ்ந்து சிந்திக்க (reflective) அழைப்பு விடுக்கின்றது. (Chawlers 2009) மேற்குறிப்பிட்ட செயற்பாடு ஒரு கருத்துருவாக்கத்திற்கு மக்களை வழிநடத்திச் செல்கின்றது.

இக்கருத்துருவாக்கம் ஏற்கனவே உள்ள சொல்லாடல் செல்நெறியில் செல்வாக்குச் செலுத்தும். ஒலிவியர் டபேன் (Olivier Dabene) தெரு ஓவியம் மூன்று விதங்களில் சனநாயகத்திற்கு பங்களிப்புச் செய்வதாகக் குறிப்பிடுகின்றார் (2020) முதலாவது அரசியல் வெளிப்படுத்தலை மேம்படுத்தல் (Enhancing Political Expression) இரண்டாவது நகர குடியுரிமையும் அதிகாரம் கொடுத்தலும் (empowerment and Urban citizenship) மூன்றாவது பொது வெளியை நீட்சியாக்கல் அல்லது விரிவுபடுத்தல் (stretching the public sphere) மேற்கூறப்பட்ட மூன்றையும் தனித்தனியாக ஆராயலாம்.

அரசியல் வெளிப்படுத்தலை மேம்படுத்தல்

இது குறித்து ஏற்கனவே முதலாவது பாகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுவெளி என்ற தலைப்பில் ஓரளவிற்கு பார்த்திருக்கின்றோம். விமர்சனக் கோட்பாட்டாளர்களின் பார்வையில் சனநாயம் என்பது, ‘அரசியலுடன் உரையாடுவதற்கு அல்லது ஈடுபடுவதற்கு ஒருவருக்குள்ள சுதந்திரமே சனநாயகத்தை தீர்மானிக்கின்றது’(O.Dabene 2020). Downey (2014) சொல்லுகின்ற விளக்கமும் இங்கு கருத்தில் கொள்ளப்படுவது சிறந்தது. ‘அரசியல் எனப்படுவது தீர்மானித்தல் அடிப்படையில் முடிவு செய்யப்படுமாயின், உதாரணமாக யாருக்குப் பேசுகின்ற அதிகாரம் உள்ளது, கேட்கப்படுகின்ற அல்லது பார்க்கப்படுகின்ற தளத்தில் தற்கால ஓவியம், அரசியலையும் அதன் செல்நெறியையும், வெவ்வேறு உத்தியினூடு சிக்கலுக்குட்படுத்துகிறது, விரிவாக்குகின்றது, மீள் – கற்பனை செய்கின்றது என்பது விளங்கும்’ (2014)

சனநாயக வெளி சுருங்கும் போது அல்லது இறுக்கமடையும் போது தெரு ஓவியங்களினூடாக அவ் வெளியை விரிவுபடுத்தல் என்பது அவசியமாகின்றது. இது நடைமுறைச் சாத்தியமா என்ற கேள்விகளுக்கு இலத்தீன் அமெரிக்க நாடுகளில் குறிப்பாக பிரேசில், ஆர்ஜென்டினா போன்ற நாடுகளின் தெரு ஓவியர்களின் அனுபவம் எங்களுக்கு வழிகாட்டலாம். ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பொதுவெளியை மீளப்பெற்று அரசியல் தெரு ஓவியத்தை, எதிர்ப்பின் மாற்று ஊடகமாக மாற்றுவதென்பது வெறுமனே ஓவியம் சார்ந்த விடயமல்ல, நம்பிக்கை சார்ந்தது.

அடக்குமுறைக்குள், அடக்குமுறைக்கெதிரான மிகச் சிறிய விடயமும் அதிகாரம் அல்லது நம்பிக்கை இழந்தவர்களுக்கு அதிகாரத்தையும் நம்பிக்கையையும் அளிப்பதாகும். பிரதிநிதித்துவ சனநாயகத்தில், குறிப்பாக சிறீலங்காவில் கடந்த பாராளுமன்ற, சனாதிபதி தேர்தல் சிறுபான்மை இனங்களின், எண்ணிக்கை அடிப்படையில், வாக்குகளை செல்லாக் காசாக்கியுள்ளன. சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகள், பல்லைப்பிடுங்கிய சிறுத்தைகளாக்கப்பட்ட நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதிநிதித்துவ சனநாயக செய்முறை மூலம் எதிர்ப்பை, மாற்றத்தை ஏற்படுத்துவதென்பது சிக்கலான விடயமாகவே தென்படுகின்றது. இந்த நிலையில் அடக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவ ஊடகமாக தெரு ஓவியம் மாற்றப்பட்டுள்ளது. மெக்சிகோ, ஆர்ஜென்ரீனா, சிலி போன்ற நாடுகளில் மேற்குறிப்பிட்ட அடக்குமுறையையும், அதன் எதிர்ப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தும், பிரதிபலிக்கும் ஓவியர்களும் சமூக செயற்பாட்டாளர்களே ஏனெனில் மக்களுக்கான மாற்று வழியைச் சிந்திக்க தெரு ஓவியங்கள் உதவி செய்கின்றன.

நகர குடிமையும் அதிகாரம் கொடுத்தலும்

Roland Barthes குறிப்பிடுகின்ற ‘படைப்பாளியின் இறப்பு’(death of the author) அவருடைய கருத்துப்படி குறிப்பாக இலக்கிய விமர்சனத்தில் படைப்பாளி கலந்துரையாடலின் மையப்புள்ளி அல்ல மாறாக ‘படைப்பு’. படைப்பாளியின் படைப்பே மையப்புள்ளியாக மாறுகின்றது. அது போலவே தெரு ஓவியத்திலும், ஓவியர் மறைந்து, ஓவியரின் படைப்பே சனநாயகப் புரட்சிக்கான மையப்புள்ளியாக மாறுகின்றது. ஓவியர், ஓவியத்தின் விவரணத்தை பார்வையாளரின் கையில் விட்டு விடுகின்றார். இந்த உத்திதான் அரசியல் மேலாதிக்க சொல்லாடலைக் கட்டவிழ்க்கின்றது. அதற்குப் பின்னால் சனநாயக கட்டமைப்பின் உள்நோக்கம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. (Nachtergeal (2015) பொது வெளியூடு அடக்குமுறைக்கெதிரான பிரதிநிதித்துவத்தை தெரு ஓவியங்களுக்கூடாக வெளிப்படுத்துதல், Semiotic democracy எனக் கூறப்படுகின்றது. Lyman Chaffee (1993) தெரு ஓவியம் பற்றி குறிப்பிடுகையில் ‘தெரு ஓவியம் வாக்குரிமை பறிக்கப்பட்டவர்களுக்கான வெகுஜன ஊடகம்’ எனக் குறிப்பிடுகின்றார்.

சிறீலங்காவில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ளவர்களின் நிலை என்பது வாக்கு இருந்தும் வாக்குரிமை பறிக்கப்பட்ட நிலை. Cassandra வும் Guick (2015) மேற்குறிப்பிட்ட அந்த நிலையை பெண் ஓவியர்கள் ஆணாதிக்க ஓவிய வெளியில் சமத்துவம் தேடுதல் போன்றது என குறிப்பிடுகின்றனர். Dryzek (2000) கருத்துப்படி அரசியல் பொறுப்புக்கூறல் தொடர்பில் தெரு ஓவியங்கள் வீரியமான பங்களிப்பை வழங்கலாம். இவ்வாறாக அவர் குறிப்பிடுகின்ற ‘Difference Democracy’ வரலாற்று ரீதியாக அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும்’. நகர குடிமை என்று Holston (2008) குறிப்பிடுவது அரசுக்கு எதிரான கிளர்ச்சியை நோக்காகக் கொண்டது. உரிமைகளை பெறுவதற்கும், நிலைநிறுத்துவதற்கும், அடக்குமுறைக்கெதிராக கருத்துருவாக்கம் செய்கின்ற ஓவியர்களின் தூரிகை பலமானது. இவர்களின் கூட்டுப்பலம் புதியதொரு சனநாயக வெளியை திறக்கவல்லது.

 

பொதுவெளியின் நீட்சி

Olivier Dabene இவ் நீட்சி மூன்று தளங்களில் நிகழ்வதாகக் குறிப்பிடுகின்றார். முதலாவது தளத்தில் புதிய செயற்பாட்டாளர்கள் உள்வாங்கப்படுகின்றனர். குறிப்பாக பொது விவாதங்களிலும், கலந்துரையாடல்களிலும், இரண்டாவது, பொது வெளியின் நீட்சி, ஓவிய வெளி தொடர்பாக, மூன்றாவது இணையத்தள பாவனையால் உருவாக்கப்பட்ட எண்ணிம பொது வெளியும் (Virtual space) அதன் நீட்சியும். பொது வெளி பெரும்பாலும் அதிகாரம் கொண்டவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும், விளிம்பு நிலை (Subaltern) மக்களுக்கான பொதுவெளி மறுக்கப்பட்டே வந்துள்ளது. இது தாராளவாத சனநாயக வெளியில் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான சனநாயக வெளியை உருவாக்கக்கூடிய சனநாயக விழுமியங்களை வரவேற்கின்ற மனநிலை உண்டு.

ஆனால் ஏனைய ஆட்சிமுறைகளில் இந்த வெளியின் உடைப்பைச் சாத்தியமாக்கக்கூடிய பலம் தெரு ஓவியர்களிடமே அதிகமாகவே உள்ளது.

-எழில்-

தெருஓவியம்-மென்வலு-சர்வதேச தொடர்பாடல் -பாகம் 1 – எழில்

https://www.ilakku.org/தெருஓவியம்-மென்வலு-சர்வத/ 

தெருஓவியம்-மென்வலு-சர்வதேச தொடர்பாடல் -பாகம் 1 – எழில்

  12 Views

தெரு ஓவியம் என்று குறிப்பிடுகின்ற போது Banksyயினுடைய தெரு ஓவியங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளேன்.

Banksyஐ பற்றிய சதிக்கோட்பாடுகள் இணையத்தளம் எங்கும் தேவைக்கதிகமாக இருக்கின்ற போதிலும், இது வரைக்கும் முகமறியப்படாத நபராக 1990களிலிருந்து இன்று வரைக்கும் தனது வரைதல்களால் அரசுகளின் முகத்திரையை உரித்து யதார்த்தத்தை கோடுகளின் உதவியுடன் வர்ணிக்கின்ற இங்கிலாந்தை தளமாகக் கொண்டியங்கும் உண்மைப் பெயர் அறியப்படாத  ஆனால் Banksy என்ற மிகவும் பிரபலமாக அறியப்படுகின்ற வீதியோர வரைதல்களை இயக்கமாக்கிய அவரின் ஒரு சில வரைதல்களை உற்று நோக்கலாம்.

படிமம் (image) கனதியானது. உரைமூலம் போலல்லாது, அவ்வப்போது படிமங்கள் அரசியல் செல்நெறிக்கு ஏற்ப ஒத்ததாகவும், எதிரானதாகவும், மாற்றாகவும் வரலாற்றில் வெளிவந்தது புதிய விடயமுமல்ல. தெரு ஓவியராக (street artist) பலராலும் அறியப்படும் முகமறியா நபராக வெவ்வேறு நாடுகளில் பொது வெளியிலும், சர்ச்சைக்குரிய வெளியிலும், ஓவிய வெளியை கலைக்கூட மையத்தை கட்டவிழ்த்து ஓவியத்தளத்தை விளிம்பு நிலைக்கு நகர்த்தி சர்ச்சைக்குரிய தலைப்புகளில் யதார்த்தத்தினை பிரதிபலிப்பது மாத்திரமல்ல மாற்று கருத்துருவாக்கத்தை முன்வைத்து அடக்குமுறை அரச நிறுவனத்திற் கெதிரான தனது நிலைப்பாட்டை பதிவு செய்கின்ற ஓவியராக இக் காலத்தில் அறியப்படுகின்றார்.

ஓவியத்தினூடு சமூக – அரசியல் செயற்பாட்டுத் தளத்தை உருவாக்கியது மட்டுமல்ல, தெரு ஓவியத்தை சமூக – அரசியல் இயக்கமாக கட்டமைத்தவராக அறியப்படுகின்றார். Banksyயின் ஓவியம் கொரில்லா ஓவிய (Jennifer haris 2011) வகையைச் சார்ந்தது என குறிப்பிடப்படுபவர்களும் உளர். கொரில்லா ஓவியங்கள் கலாச்சார/பண்பாட்டு நெரிசில் (Culture Jamming – Lievrouw 2010) கருத்தியலை அக நிலையாகக் கொண்டிருக்கும்.

இதுவரைக்கும் வெளியிடப்படாமல் இருப்பது அவருடைய அடையாளம். அவருடைய தனித்துவமான வரைதல் அடையாளமாக Stencil வடிவ ஓவிய முறைமையைப் பயன்படுத்தி தடையில்லாக் கைக்கோடுகள் மூலம் ஓவியங்கள் வரையப்படுகின்றன. தனது சமூக – அரசியல் செயற்பாட்டுத் தளத்திற்கான ஊடகமாக ஓவியத்தை Banksy பயன்படுத்துகின்றார். விளிம்புநிலையை வலுப்படுத்தும் கருவியாக ஓவியத்தை கையாளும் விதம் அனைவரதும் கவனத்தை ஈர்க்கின்றது.

பலஸ்தீனமும் Banksyயும்

இஸ்ரலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதியில் Banksyயின் குறிப்பாக ‘பிரிக்கும் மதில்’ எனக் கூறப்படுகின்ற  மதிலில் Banksyயின் ஓவியங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.  Banksy தன்னுடைய கருத்துக்களைப் பரப்புவதற்குரிய உத்தியாக பல்வேறு வழிகளைக் கையாளுவதனைக் காணலாம், அதில் முக்கியமாக பார்வையாளர்களே சமூகவலைத் தளங்களுக்கூடாக பரப்புவதற்கான  சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. வெறுமனே ஓவியம் மட்டுமல்லாது வெவ்வேறு தளங்களில் தான் சொல்ல வேண்டிய செய்தியை பரவவிடுகின்றார். ஓவியங்களை விவாதப் பொருளாக மாற்றி, ஓவியங்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு மட்டுமானதல்ல அனைவருக்குமானது என்பதற்காக தனது படைப்புகளை பொது வெளியிலேயே உருவாக்குகின்றார். இவ்வாறான உருவாக்கம் ஓர் அரசியல் செயற்பாட்டுத் தளத்தை உருவாக்குகின்றது. வெறுமனே பலஸ்தீனத்தின் இழப்பையும், அழிவுகளையும் சுட்டி நிக்காமல் அதற்கான மாற்று வழிகளை சிந்திக்க அழைப்பதாக அமைகின்றது.

இராணுவ வீரரைச் சோதனை செய்யும் சிறுமி. யதார்த்தத்தை தலைகீழாக புரட்டிப்போடுவதன் மூலம் பலஸ்தீன மக்களின் தினசரி யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக அமைகின்றது. பலஸ்தீன உண்மையான யதார்த்து இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்ற போதிலும், முரண்படிமங்களுக்கூடாக யாதார்த்தத்தை பிரதிபலிப்பது; சொல்ல வேண்டிய செய்தியை இன்னும் கனதியாக்குகின்றது. இஸ்ரேலிய அடக்குமுறைக்குள் சிறுவர்கள் மட்டுமல்ல பெண்கள் அனுபவிக்கின்ற கொடுமைகளையும் சொல்லுகின்றது. பலஸ்தீனர்களின் சுதந்திரத்தின் எல்லையை தெளிவாக படம் போட்டுக் காட்டுகின்றது.

“கழுதை ஆவணங்கள்” (Donkey Documents) என்ற ஓவியத்தில் கழுதையிடம்  இஸ்ரேல் இராணுவ வீரர் அடையாள அட்டையை சோதனை செய்யப்படுவதாக வரையப்பட்டுள்ளது. இது இராணுவ கெடுபிடிகள் எதுவரைக்கும் செல்லும் என்ற கூறுவதாக வரையப்பட்டிருக்கின்றது.

குண்டு துளைக்காத கவசம் அணிந்த சமாதனப் புறாவின் நெஞ்சில் குறி வைக்கப்பட்டிருக்கின்றது.

பலஸ்தீன பிள்ளைகள் இஸ்ரேலிய காவல் கோபுரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடுவதை குறித்து நிற்கின்றது. அந்தப்படத்திற்கு கீழ் உள்ள வாசகம் மிகவும் குறிப்பிடத்தக்கது Visit historic Palestine. The Israeli army liked it so much they never left– வரலாற்று பலஸ்தீனத்தை தரிசியுங்கள் இஸ்ரேல் இராணுவத்திற்கு மிகவும் கவர்ந்துள்ளது. அதனால் அவர்கள் அதை விட்டும் போகவில்லை.

இஸ்ரேலியக் குண்டுகளால் அழிக்கப்பட்ட கட்டடங்களுக்கு மத்தியில் எஞ்சியிருக்கும் கழிவறைச் சுவரில் பூனைக்குட்டி. அந்தப் பூனைக் குட்டி குண்டுகளால் அழிக்கப்பட்டு எஞ்சியிருக்கும் இரும்புக் கம்பிகளாலான பந்துடன் விளையாடுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. போர் பூனைக் குட்டிகளையும் விட்டுவைக்கவில்லை. மனிதர்களை?

“அழுகின்ற எகிப்திய தேவதை நியோப் (Niobe)” இறந்து போன தனது வாரிசுகளுக்காக அழுகின்ற எகிப்திய தேவதையின் படம் 2014ல் அழிக்கப்பட்ட இடிபாடுகளுக்கிடையே எழுந்து நிற்கின்ற குரு ராபி டர்டுனாவின் வீட்டு இரும்புக் கதவில் வரையப்பட்டிருந்தது.

“பலூன் விவாதம்” (Balloon Debate) கறுப்பு மையினால் வரையப்பட்ட ஓவியம். சிறுமி ஒருவர் சுவரின் அடுத்த பக்கத்திற்காக போக விரும்புகையில் பலூன்கள் சிறுமியைத் தூக்கிப்போவதான தோற்றத்தைக் கொடுக்கின்றது. சிறுமியினுடைய சுதந்திர வேட்கைக்கான தாகத்தையும், சுவரின் தடுப்பும் வெளிக் கொணரப்படுகின்றது. அதே நேரத்தில் அந்தச் சிறுமியின் நம்பிக்கையையும் சுட்டி நிக்கின்றது.

“தப்பித்தல்” (Escapism) சிரித்த முகத்துடனான சிறுவனது கைகளில் வண்ணக்கட்டி. அவனால் சிந்திக்கக் கூடிய எளிய முறையிலான தப்பித்தல் வழியாக அவால் வண்ணக் கட்டியால் வரையப்பட்ட ஏணி சுவரின் ஒரு முனையைத் தொடுவதாக வரையப்பட்டிருக்கிறது. இதை விட இன்னும் அதிகமான ஓவியங்கள் இருக்கின்றன.

மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு செயற்றிட்டம், “The walled off hotel” உலகத்தின் மற்றைய ஹொட்டல்களுடன் ஒப்பிடும் போது மிக மோசமான நிலக் காட்சியைக் கொண்ட ஒன்றாக இது இருக்கின்றது. ஒரு நாளில் 25 நிமிடங்கள் மட்டுமே இதன் அறைகளுக்கு நேரடியான சூரிய ஒளி கிடைக்கின்றது. இஸ்ரேலையும் பலஸ்தீனத்தையும் பிரிக்கின்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது வெறுமனே ஒரு ஹொட்டலாக இல்லாமல், Banksyயின் ஓவியங்களின் கவின்கலையகமாகவும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் எதிர்ப்பு வடிவமாகவும், இதன் அறைகளிலிருந்து பார்க்கும் போது பார்வைக்குத் தெரிவது தடுப்புச் சுவர்கள் மட்டுமே. இந்த ஹொட்டல் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியாக உருவாக்குவதற்காக அங்கு வருபவர்களுக்கு குறிப்பாக இஸ்ரேலியர்களுக்கு யதார்த்தத்தை புரிய வைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக Banksy குறிப்பிடுகின்றார்.

Banksy விளைவு (Banksy Effect)

Banksyயினுடைய தெரு ஓவியங்கள் சமூகத்தைப்பற்றி, அரசியல் அல்லது வாழிவியல் பற்றி பேசுபவை. அவை பார்வையாளர்களுக்கான சிந்திக்கும் இடைவெளியை விட்டுச் செல்லுகின்றன. ஜெராட் றிச்சர் உடைய பிந்திய ஓவியங்கள் போன்று பண்பியல் ஓவிய வகைகளைச் சார்ந்ததல்ல (Abstract Painting). தான் எதற்காக Graffitiஐ தவிர்த்து stencil style ஐ தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தைக் கூறும்போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “Stencil Style னுடைய அரசியல் கனதியையும், வலுவையும் அத்துடன் Stencil இற்கு மேலதிகமான அரசியல் வலு வரலாறும் இருப்பதுடன்,  Stencil Style போர்களை நிறுத்தி, புரட்சிகளை உருவாக்குவதற்கு உதவி செய்ததாகக்” குறிப்பிடுகின்றார். ( Ellsworth – Jones 2013)

நிறுவன எதிர்ப்பாளராக (anti – establishment) அறியப்படும் Banksy, நிறுவன கட்டுடைப்பைச் செய்து வருவது வியக்கத்தக்கதல்ல. ஏற்கனவே ஓவிய வெளியில் உள்ள நடைமுறைகளைப் பயன்படுத்தியும் அதே நேரத்தில், அதை நிராகரித்தும் விளிம்பு மைய ஓவியத்தளத்தை மெதுவாக கட்டமைப்பதை அவதானிக்கலாம். Banksyஇனுடைய ஓவிய சமூக-அரசியல் செயற்பாட்டுத்தளம் ஏனைய தெரு ஓவியங்களுக்கும் ஓவிய வெளியை உருவாக்கியுள்ளது. அவ் வெளி நிறுவன மைய வெளியின் ஆக்கிரமிப்பை கட்டுடைப்புச் செய்கின்றது. ஓவியம் எதிர்ப்பை வெளிப்படுத்தும் (ஆக்கிரமிப்பிற்கு எதிராக) ஊடகமா பின் முள்ளிவாய்க்கால் தளத்தில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு இயக்கமாக வலுப்பெறவில்லை. கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்ட நிலையில் ஓவியத்தின் வகிபங்கு காத்திரமாக இருக்கலாம். அரசியல் எதிர்ப்பை பதிவு செய்யும் ஊடகமாக பண்பியல் அல்லது அருவமான படைப்புக்கள் பரிசோதித்துப் பார்க்கப்படலாம். அப் பரிசோதனைக்கும் சனநாயக வெளியின் சுருக்கம் தடையாகவே இருக்கப் போகின்றது. Banksy தனக்கான பார்வையாளர்களை உருவாக்குவதன் பூடகத்தன்மையையும் ஆய்வு செய்யப்பட வேண்டும். Banksyயின் ஓவியங்கள் உருவாக்கும் அரசியல் வசைத்திறமும், கேலித் தாக்குதலும் அவருக்கே உரித்தானது.

Banksyயிடைய அநாமதேயத் தன்மை (Anonymity) அதன் வினைத்திறன் மிக்க விளைவுகளை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. பண்பாட்டு நெரிசல் எவ்வாறு படைப்பின் வீச்செல்லையை விரைவாக்குகின்றதோ அதேபோல் அநாமதேயத்தன்மை தெரு ஓவியங்கள் உருவாக்கும் விளைவுகளுக்கு காத்திரமான வகிபங்காற்றுகின்றன. ஓவியங்கள் முதலீடுகளாக்கப்பட்ட கணங்களில் உரிமை கோருதலும் அடையாளங் காணலும் இன்றியமையாததாக கட்டமைக்கப்படுகின்றது. ஆனால் Banksyயின் அநாமதேயத் தன்மை முதலாளித்துவத்திற்கு உள்வாங்கப்பட்டாலும், முழுடையாக முதலாளித்துவ வர்த்தக மயமாக்கலுள் மூழ்கவில்லை என்பது ஒரு எடுகோள். அநாமதேயத் தன்மை தன்னை ஒரு தனிநபராக அடையாளம் காணுவதில் தான் உள்ளது. ஆனால் அவருடைய ஓவியங்கள் Banksy என்ற புனைப் பெயரில் வெளிவருகின்றன.

Banksyயினுடைய தெரு ஓவியங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் முறைமை விவரண பிரிநிதித்துவ முறைமை சார்ந்தது. (Narrative Representation – James G. Nobis)  Banksyயினால் வரையப்பட்ட தெரு ஓவியங்களில் பெரும்பாலானவை பார்வையாளர்களின் ஊடாட்டத்தை ஈடுபடுத்துவையாக வரையப்பட்டுள்ளது. அவ் ஊடாட்டம் பெரும்பாலுமே கண்மட்ட அளவுக்கு வரையப்பட்டிருக்கும். இரண்டாவது அவ் ஓவியங்கள் அமைந்திருக்கும் பொது வெளி பார்வையாளர்களுக்கும், பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட யதார்த்தத்திற்குமான சமூக உறவு பின்வரும் ஐந்து பண்புகளில் தங்கியிருக்கின்றது, பார்வை (Gaze), பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தொலைவு (Represented Distance), கிடைநிலை சாய்வு (Horizontal angle),  செங்கோட்டுச் சாய்வு (Vertical angle), வர்ணம் (Colour) – (James G.Nobis).   Banksyயின் சமூக விமர்சனப் பார்வையினூடு பிரதிநிதித்துவப்படுத்தப்படும். தெரு ஓவியங்களின் நோக்கங்கள் இரண்டாக இருக்கலாம், ஒன்று பார்வையாளர்களோடு தொடர்பை ஏற்படுத்தி, மாற்றத்தின் தூதுவர்களாக மாற்றுதல். இரண்டாவது பிரதிநிதித்துவப்படுத்தப்படும் யதார்த்தம் தொடர்பான கலந்துரையாடல்களை உருவாக்குவதன் மூலம் ஓரு செயற்பாட்டுத் தளத்தை திறந்து விடுதல் அவையே இலக்கை நோக்கிய பயணத்திற்கு வழிகோலும்.

வர்த்தக மயப்படுத்தப்பட்ட பொது வெளி

காலத்திற்கு காலம் விடுவிப்பு என்ற பெயரில் சிறீலங்கா அரசினால் கையகப்படுத்தப்பட்ட தமிழர் நிலங்களின் பொது வெளிகள் அதி உச்ச வர்த்தக மயப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது. தாராளவாத நல்லிணக்கச் செயற்றிட்டம் (Liberal Peace Project) பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதை யாரும் மறுப்பதற்கில்லை. இது பற்றிய ஆய்வுகள் பொது வெளியில் நிறையவே உள்ளது. பொது வெளியை ஆக்கிரமித்துள்ள விளம்பரங்கள் பொருளாதாரச் சந்தையின் போட்டியை பிரதிபலிப்பதோடு, சந்தை மேலாண்மையையும், மக்களை நுகர்வோராக்கி மீண்டும் நுகர்வோருக்குரிய அடையாளத்தை திணிப்பதையும், நுகர்வோர் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதையும், பொது வெளி பிரதிபலிக்கின்றது.

இப் பொது வெளி தனியார், அரசுகளின் சுவர்களை சுட்டி நிற்கின்றது. A9 வீதியில் பயணிக்கின்ற அனைவரையும் வரவேற்கின்ற விளம்பரப் பதாதைகளை யாரும் மறக்கமுடியாது. பொது வெளி, அரச, தனியார் வேறுபாடற்று வடக்கு – கிழக்கில் முதலாளித்துவ சந்தையால் ஆக்கிரமிக்கப்பட்டு மக்களுக்கான உரிமைப் பொது வெளியை நிராகரித்துள்ளது. சந்தையை மையப்படுத்திய சிந்தனையை மக்களுக்கு நினைவூட்டுவதோடல்லாமல், மாற்று சிந்தனை வெளி திறப்பதை மறுக்கின்றது. தெரு ஓவியங்கள் பெரும்பாலுமே மாற்று சிந்தனையை முன்வைக்கின்றது. தெரு ஓவியம் கலாச்சாரப்  பண்பு சார்ந்தது. தெரு ஓவியத்தை மையப்படுத்தி மாற்று கலாச்சார சிந்தனையை பிரதிபலித்தல் அருகிப்போகின்றறது எனக் கூறினால் மிகையாகாது. குறிப்பாக வடக்கு – கிழக்கில்.

Banksy தன்னுடைய நூலில் இது பற்றி தெளிவாகப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “எங்களுடைய நகரங்களை ஆளுபவர்கள் தெரு ஓவியங்களை விளங்கிக் கொள்ளாதவர்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இலாபத்தை ஈட்டும் அல்லாத எவையும் இருத்தலுக்கு தகுதியற்றது என்பது கணிப்பு. எங்களுடைய பொது வெளியை அவலட்சணப்படுத்தும், உருவழிக்கும் முகவர்களாக வணிக நிறுவனங்கள், குழுமங்கள் செயற்படுகின்றன. அவர்களுடைய இலட்சினையும், விளம்பரங்களும், மக்களை குறுகியவர்களாக பிரதிபலிக்கின்றது, அவர்கள் விளம்பரம் செய்கின்ற பொருட்களை கொள்வனவு செய்யாதவிடத்து. பொது வெளியில் காணப்படுகின்ற விளம்பரங்கள் மக்களுக்கான மாற்றீடை தருவதில்லை, அந்த விளம்பரத்தை பார்த்தாலும், பார்க்கா விட்டாலும். இப்பொது வெளி மக்களுடையது அதற்கு உரிமை கொண்டாடுவதற்கு மக்களுக்கு உரித்திருக்கின்றது. (பக்கம் 8)”. இது மக்களுக்கான வெளியை மறுக்கின்ற மீறல் தொடர்பானது, அநீதியும் கூட.

இப் பொது வெளியை மீளப் பெறுவதற்கான உரிமை மக்களிடமே தங்கியுள்ளது. தெரு ஓவியங்கள் ஒரு கருவியாகவும், உத்தியாகவும் பயன்படுத்தப்படலாம். மக்களுக்கான பொது வெளியை மீளப்பெறுவதில் தெரு ஓவியர்களின் பங்கு மிகக் காத்திரமானது. முதலாளித்துவ கலாச்சார மேலோண்மையையும் ஏனைய மேலோண்மைகளையும், அடக்கு முறைகளையும் எதிர்க்கும் ஆற்றலை துண்டிவிடுகின்ற ஊக்கியாக தெரு ஓவியங்கள் செயற்படலாம். “பொது வெளியை கையகப்படுத்தல் அல்லது உரிமை கோருதல் அதனுடைய தோற்றம் தொடர்பில், அதிகாரத்துடன் தொடர்புடையது, (Ferrell)”. பொது வெளி ஆக்கிரமிப்பில் ஆக்கிரமிப்பாளரின் நோக்கத்தை பார்வையாளர்கள் பூர்த்தி செய்ய அழைக்கப்படுகின்றார்கள். அதுவும் ஒரு விதத்தில் இலக்கிலிருந்து திசை திருப்பும் முயற்சியே.

பொது வெளிகளை மீளப்பெற்று அவற்றை மக்கள் குரலாக பிரதிநிதித்துவப்படுத்துவதில் தெரு ஓவியர்களின் வகிபங்கு மிக அவசியமானது. பலஸ்தீனத்தை பிரிக்கின்ற சுவர் ஓவியங்கள் பலஸ்தீன மக்களின் குரலாக மாற்றப்பட்டிருக்கின்றன. தெரு ஓவியங்கள் அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட மக்களின் அடக்குமுறை எதிர்ப்புச் சக்திக்குரிய கருவியாக உபயோகிக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட பொதுவெளியை மீள் கையகப்படுத்தி செயற்பாட்டுத் தளமாகக் கட்டமைத்து அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட மக்களின் நீதிக் கோரிக்கைகளை பிரதிநிதித்துவப்படுத்துவது. அழகியலை ஆக்கபூர்வ எதிர்ப்புச் சக்தியாக கட்டமைப்பதாகும். அழகியல் வெறுமனே அழகியலுக்காகவன்று. ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பொது வெளியை அழிக்க வேண்டிய தூண்டுதல் ஆக்கபூர்வமான தூண்டுதலே என்று பிக்காசோ குறிப்பிடுவதாக சொல்லப்படுகின்றது (The urge to destroy is also a creative urge – Picasso).

ஆக்கிரமிக்கப்பட்ட பொதுவெளியின் ஆக்கபூர்வமான அழிவினூடாக (creative destruction) மக்களின் நலன்களை, அரசியல் கோரிக்கைகளை, சமூக நீதியை, விடுதலையை மையப்படுத்திய பிரதிநிதித்துவப்படுத்தல் கலந்துரையாடல்களை, செயற்பாட்டுத்தளத்தை, ஓருங்கமைக்கப்பட்ட எதிர்ப்புச் சக்தியை கட்டமைக்கின்றது. Banksyயின் முறையியலை சிக்கலுக்குட்படுத்தாது அதை அவ்வாறே உள்வாங்குவது காலனித்துவ இறக்குமதியாகும். அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட சமூகங்களின் ஆக்கபூர்வமான எதிர்வினை முறையியலை ஆய்வுக்குட்படுத்தி உதாரணமாக, காஷ்மிர், குர்திஷ், பலஸ்தீன அடக்குமுறைக்கெதிரான இன்னும் பிற போன்றவற்றை ஆய்ந்து எமக்கான ஆக்கபூர்வமான எதிர்ப்புச் சக்தியை (creative resistance) கட்டமைத்தல் – கலாச்சாரம், பண்பாடு, சிந்தனை, வாழ்வியல் முறைமை சார்ந்து – கட்டமைத்தல் இன்றியமையாதது.

புதன், 4 நவம்பர், 2020

திருநாவுக்கரசு நேர்காணல்


 

https://www.patrikai.com/மனுஸ்மிருதி-நூலின்-நகல்

https://www.patrikai.com/மனுஸ்மிருதி-நூலின்-நகல்க/ 

புதுடெல்லி:

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஏ.பி.வி.பி மாணவர் சங்க முன்னாள் மற்றும் இந்நாள்  உறுப்பினர்கள் மனுஸ்மிருதி நூலின் நகல்களை எரித்து நேற்று ( மார்ச்-8) ஆர்ப்பாட்ட்த்தில்  ஈடுபட்டனர்.

பார்ப்பனிய ஆதிக்கத்தை வலியுறுத்தும் இந்துமத நூலாக மனுஸ்மிருதி விளங்குகிறது. மனித சமூகத்தின் ஜாதியப்பாகுபாடுகளை நிலைநாட்டுகிற நூலாகவும், பெண்களை தரக்குறைவாக விமர்சிக்கும் நூலாகவும் மனுஸ்மிருதி விளங்குவதால்  அந்த உள்ளடக்கம் இடம்பெற்றுள்ள  பக்கங்களின் நகலினை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக அம்மாணவர்கள்  தெரிவித்தனர்.

பெண்களை தரக்குறைவாய் விமர்சிக்கும் எதனையும் சகித்துக் கொள்ளமுடியாது என்ற செய்தியை உலகத்திற்கு தெரிவிக்கும் வகையில் மனுஸ்மிருதியை எரிக்கும் போராட்டத்திற்கு சர்வதேச மகளிர் தினத்தை தேர்வு செய்ததாக  ஏ.பி.வி.பி. மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வரும் ஏ.பி.வி.பி.கிளையின் துணைத் தலைவர் ஜட்டின் கொரையா கூறியதாவது:-

மனுஸ்மிருதி நூலில் பெண்களைப் பற்றி தவறாக  40 விஷயங்கள்  எழுதப்பட்டுள்ளன. எனவே பெண்களை இழிவு செய்யும் அந்த 40 விஷயங்களை உள்ளடக்கிய நகல்களை சர்வதேச மகளிர் தினத்தன்று எரித்து எமது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளோம்.

மனுஸ்மிருதி நூலின் 2/213 ஆம் பகுதியில் ஆண்களை மயக்குதற்காகவே பெண்கள் இந்த உலகில் இயற்கையாகவே கவர்ச்சியாக படைக்கப்பட்டுள்ளனர். ஏனெனில்  ஒருபோதும் ஆண் துணையின்றி பெண் வாழ முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், 2/214 இல் ஆண்களை வழி தடுமாற வைப்பவர்கள் பெண்கள்தான் என்றும் இதில் கற்றவர்,முட்டாள் என்ற எவ்வித வேறுபாடுமின்றி இருவரையும் தங்களின் ஆசை அடிமைகளாகவே வைத்திருப்பது பெண்களின் வர்க்க குணம் என்றும்  அதில் கூறப்பட்டுள்ளது. எனவே தான் இந்நூலின் நகல்களை எரித்த்தாக அவர் கூறினார்.

சமீபத்தில்  சித்தாந்த ரீதியாக ‘ஏ.பி.வி.பி.யிலிருந்து விலகிய பிரதீப் நர்வால் என்பவர் இப்போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர்களில் முக்கியமானவர். அவர்  இதுபற்றிக் கூறும்போது, “மனுஸ்மிருதியில் உள்ள இந்த 40 விஷயங்கள் பெண்கள் மற்றும்  தலித் மக்களுக்கு எதிராக உள்ளது. அதனால் அதன் நகல்களை எரிக்க முடிவெடுத்தோம். நான் செய்தது சரியில்லை என்பவர்கள் என்னிடம் கேள்விகள் எழுப்பலாம்” என்றார்.

மேலும், சமீபகாலமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் எந்த ஒரு நிகழ்வு என்றாலும் மிகுந்த முன் எச்சரிக்கையுடன்தான் நிர்வாகத்தினர் கையாளுகின்றனர். ஆனால் இந்த மனுஸ்மிருதி நகல் எரிப்பு போராட்டம்  பல்கலைக்கழக வளாகத்துக்குள் எவ்வித சட்டம் ஒழுங்கு  பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று  நாங்கள் தெளிவுபடுத்தியதால்தான்  எங்கள் போராட்ட்த்திற்கு நிர்வாகம் அனுமதி அளித்தது   எனத் தெரிவித்தார்.

இப்போராட்டாத்தின் அனைத்து நிகழ்வுகளையும் பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்தனர்.

 

 

 

ஞாயிறு, 1 நவம்பர், 2020

தமிழர் தாயக நாள்
1.11.1956
சென்னை மீட்பு வரலாறு
சென்னையை மீட்க தமிழர்கள் ஆந்திரர்களோடு நடத்திய போராட்டம் குறித்த வரலாற்றுச் செய்திகளை இன்றளவும் திராவிட இயக்கங்கள் எடுத்துச் சொல்வதில்லை. அதற்குக் காரணம் திராவிட இயக்கங்கள் மொழிவழித் தமிழ் நாட்டிற்கு மாற்றாக திராவிட நாடு முழக்கத்தை கையிலேடுத்ததே இதற்குக் காரணமாகும்.
சென்னை மீட்பு வரலாற்றை இனி சுருக்கமாக காண்போம். சென்னை நகரம் தொன்று தொட்டு தமிழர்களின் பூமியாகும். கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சோழர்கள் ஆண்ட தொண்டை மண்டலப்பகுதியில் கட்டுப்பட்ட பகுதியாகும். பிற்காலத்தில் தொடர்ந்து படையெடுத்து வந்த தமிழரல்லாதவர்கள் கையில் சென்னை நகரம் இருந்த போதும் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக இருந்துள்ளனர்.
1912ஆம் ஆண்டில் ஆந்திரர்கள் ஆந்திர மகாசபை அமைத்து மொழிவழி மாகாணம் கேட்டுப் போராடி வந்தனர். அப்போது ஆந்திரர்கள் சென்னையில் சிறுபான்மையினராக வாழ்ந்த போதிலும் சென்னை நகரை தனக்கு சொந்தமாக்க விரும்ப வில்லை. 1920ஆம் ஆண்டில் நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சியைப் பிடித்தது. அதில் ஆந்திரர்கள் தான் முதலமைச்சராக வந்தனர். 1920 முதல் 1947 வரை பதவிக்கு வந்த அறுவரில் ஐவர் ஆந்திரர். ஒருவர் தமிழர். இதன் காரணமாக சென்னை நகரம் ஆந்திரர்களுக்கு சொந்தம் என்ற கருத்து உருவாக்கப்பட்டது.
இந்திய விடுதலைக்கு (1947) முன்னர் டாக்டர். இராசேந்திர பிரசாத் தலைமையில் அரசியல் நிர்ணய மன்றம் அமைக்கப்பட்ட போது அதன் ஆலோசகராக சர்.பி.என். இராவ் என்பவர் இருந்தார். அவர் தமிழினத்திற்கு எதிரான ஒரு திட்டத்தை முன் வைத்தார். அத்திட்டத்தின் படி சென்னை மாகாணத்தை பிரிக்காமல் நிர்வாக வசதி என்ற பெயரில் இரண்டாகப் பிரிப்பது என்றும், அதன்படி வட சென்னை துணைமாகாணம், தென் சென்னை துணை மாகாணம் என்று இரண்டாக செயல்படுவது என்றும், இரு துணை மாகாணங்களுக்கும் சென்னை பொது தலைநகராக இருக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தை தெலுங்குத் தலைவர்களான டாக்டர். இராதா கிருஷ்ணன், வி.வி.கிரி, தங்குத்தூரி பிரகாசம் பந்துலு ஆகியோர் ஆதரித்தனர். ஆந்திர மகாசபையும் வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியது. சர்.பி.என்.ராவ் திட்டத்தின்படி சென்னை மாகாணம் இரண்டு துணை மாகாணமாகப் பிரிந்திருந்தால் ஆந்திரருக்கு சென்னையுடன் கூடிய மொழிவழி ஆந்திர மாகாணம் கிடைத்திருக்கும். ஆனால் தமிழருக்கோ சென்னையை ஆந்திரருக்கு பறிகொடுத்ததோடு, தமிழகம், மலபார் மாவட்டம், தென்கன்னட மாவட்டங்கள் இணைந்த மூன்று மொழி பேசும் கலப்புத் துணை மாகாணம் அமைந்திருக்கும்.
நல்லவேளையாக அன்றைக்கு ம.பொ.சிவஞானம் தமிழர்கள் சார்பில் நின்று குரல் கொடுத்தார். தமிழ்நாட்டிலிருந்து சென்னையைத் துண்டாடும் நாள் சென்னையில் இரத்த ஆறு ஓடும் நாளாகத்தான் இருக்க முடியும். தங்கள் தலைகளைக் கொடுத்தேனும் தமிழ்நாட்டின் தலை நகரைக் காத்திட வேண்டும் என்று 'தமிழ்முரசு' ஏட்டில் (1.4.1947) முழங்கினார். அதன் பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.
1952ஆம் ஆண்டில் மீண்டும் ஆந்திரர்கள் சென்னையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். பொட்டிஸ்ரீராமுலு என்பவர் ஆந்திர மாநிலக் கோரிக்கையோடு 'மதராஸ் மனதே' என்று சென்னை மைலாப்பூரில் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கினார். அவரை நேரில் சந்தித்துப் பேசிய ம.பொ.சி. அவர்கள், "சென்னை நகர் மீது உரிமை கொண்டாடுவதை விட்டு ஆந்திர மாநிலம் கோரினால் தமிழரசு கழகம் ஆந்திரர்களுக்கு துணை நிற்கும்" என்று பதிலுரைத்தார்.
16.12.1952இல் பொட்டி ஸ்ரீராமுலு 58வது நாளில் உயிர் துறந்த போது ஆந்திரத்தில் போராட்டம் வெடித்தது. சென்னையில் தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. ஆந்திரர்கள் வெறிகொண்டு தமிழர்களை தலைநகரிலே தாக்கினர். ஆந்திரர் போராட்டத்தை கண்டு அஞ்சிய பிரதமர் நேரு தனி ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுமென்று அறிவித்தார். அப்போது தங்குதூரி பிரகாசம் பந்துலு என்பவர் ஆந்திரத்திற்கு தற்காலிக தலைநகராக சென்னை இருக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கையை ம.பொ.சி. கடுமையாக எதிர்த்தார்.
சென்னையை ஆந்திரருக்கு சொந்தமாக்கும் கோரிக்கையை நேரு ஏற்றுக் கொண்டால் உடனே பதவி விலகுவேன் என்றும் அன்றைய முதல்வர் இராசாசி அறிவித்தார். அதன் பிறகு நேரு சென்னை நகரம் அல்லாத தகராறுக்கு இடமில்லா தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு சித்தூர் மாலட்டம் முழுவதையும் சேர்த்து ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்றும், ஆந்திரத் தலைநகர் பற்றி பின்னால் அறிவிக்கப்படும் என்றும் விளக்கம் கூறி ஆந்திரர்களின் கோரிக்கையை புறக்கணித்தார்.
1956இல் மொழிவழி மாகாணம் உருவாக்கப்பட்டு சென்னைத் தமிழ் மாகாணத்திற்கு சென்னை தலைநகரம் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னை மீட்புப் போராட்டத்தில் திராவிடர் இயக்கத்தினர் எவரும் பங்களிக்க மறுத்தே வந்தனர். மொழிவழித் தேசிய உணர்ச்சி திராவிட இயக்கத்தினர் எவருக்கும் இல்லையென்பது தான் கசப்பான உண்மையாகும்.
சென்னையை மீட்டுக் கொடுத்த ம.பொ.சிக்கு சென்னையில் சிலை வைக்கக் கூட திராவிட இயக்கங்கள் மறுத்து வந்தன. சென்னையை கேட்ட தெலுங்கர் பொட்டி சிறிராமுலுக்கு கூட சென்னையில் சிலை வைத்தாகி விட்டது, ஆனால் சென்னையை தமிழருக்குப் போராடிப் பெற்றுத் தந்த ம.பொ.சிவஞானத்திற்கு சிலை இல்லையா? என்கிற தமிழ்த் தேசியர்களின் ஆதங்கத்திற்கு நீண்ட நாளுக்குப் பிறகு மதிப்பளிக்கப்பட்டது. சென்ற கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் சென்னை நகரத்தில் சிலை நிறுவப்பட்டது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்து, குடும்ப வறுமையால் பத்து வயதில் பாட்டாளியாகி, பிறகு அச்சு கோப்புத் தொழிலில் ஈடுபட்டு, அவற்றின் ஊடாக தமிழ்மொழி, இலக்கியம், இந்திய விடுதலை, தமிழ்த்தேசிய அரசியல் ஆகியவற்றில் பன்முகத் திறமையை வளர்த்துக் கொண்டு 150க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியதோடு தமிழர் உரிமைப் போர்க்களத்திலும் நின்று போராடிய ம.பொ.சிவஞானம் அவர்களை தமிழர் தாயக நாளில் தமிழர்களாகிய நாம் நினைவு கூறுவோம்!
மீள்
கதிர் நிலவன்....!!!
c2c...!!!
Image may contain: 2 people, text that says "407% தலையைக் கொடுத்து மதராஸ் மனதே! தலைநகர் ஆந்திரத் தலைவர் காப்பேன்! பொட்டி சிறிராமுலு -ம.பொ.சி. சி. -ம. பொ"
You and 13 others
1 share
Like
Comment
Share