வியாழன், 29 ஜனவரி, 2026

முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம்


https://eelamaravar.wordpress.com/2016/03/09/muthukumar-3/https://eelamaravar.wordpress.com/2016/03/09/muthukumar-3/



முத்துக்குமாரன் தந்த பேர் ஆயுதம்மான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும் காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். தீர விசாரித்து மெய் காணும் அரசியல் ஞானம்மோ, அல்லது காண வேண்டிய அவசியத்திற்கான அரசியல் சார்போ என்னிடம் இல்லை. எந்த ஒரு தனிமனிதனின் இயக்கத்தின் உண்மையை அர்ப்பணிப்பை நான் கேள்விக்குள்ளாக்கவும் முயலவில்லை. அவரவர் அவர்களுக்கான நியாயங்களை புறக்கணித்து தம்மைத் தாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியக் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நான் உணர்ந்து கொண்ட்து. என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன்.

ஜனவரி 29 வியாழக் கிழமை

நண்பகல் 12 மணிக்கு தோழர் செந்தமிழன் தஞ்சையில் இருந்து தொடர்பு கொண்டு ”ஒருவர் ஈழத்திற்காய் தீக்குளித்து விட்டார். அவரை கீழ்பாக்கம் மருத்துவமணைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்”என்ற தகவலைச் சொன்னார்.

கீழ்பாக்கம் மருத்துவமனையை நான் அடைந்த போது அவருடையபெயர் முத்துக்குமார் என்பதும் அவர் இறந்துவிட்டார் என்பதும் தெரிந்தது. குமுதம் நிருபர் அவர் எழுதியிருந்த கடிதத்தின் நகல் ஒன்றைக் கொடுத்தார். கல்லூரி மாணவர்கள் ஒரு 40 பேர் வந்திருந்தனர். தலைவர்கள் திரு.வை.கோ, திரு.நெடுமாறன், திரு.திருமாவளவன், திரு.ராமதாஸ், திரு.வெள்ளையன் (வணிகர் சங்கத் தலைவர்) ஆஜர் ஆனார்கள். ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள் தவிர தமிழ் தொலைக்காட்சிகள் எதுவும் வந்த பாடில்லை. முத்துக்குமாரின் சடலத்தை அன்று மாலையே தகனம் செய்யலாம் என மற்றத் தலைவர்கள் பேசிய போது திரு.வெள்ளையன் முத்துக்குமாரின் தந்தைக்குத் தகவல் சொல்லி அவர் வர நேரமாகும் என மறுத்தார். (நல்ல வேளை அவர் மறுத்தார்).

அவருடைய சடலத்தை எங்கு வைப்பது என விவாதம் தலைவர்களுக்குள் வந்த போது அந்தப் பொறுப்பையும் திரு.வெள்ளையனிடமே ஒப்புவித்தார்கள் மற்றத் தலைவர்கள். மற்றவர் பொறுப்பெடுத்தால் அதில் அரசியல் சாயம் வந்து விடும் என்பதே தலைவர்களின் ஒட்டு மொத்தக் கருத்து. மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்திற்கு முத்துக்குமாரின் சடலத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். தலைவர்கள் அக்கோரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. அதே நேரத்தில் வழக்கறிஞர்கள் சிலர், பூவிருந்தவல்லி சாலையில் உள்ள பேங்க் ஆஃப் சிலோனை அடித்து நொறுக்கிவிட்டு நேராக மார்ச்சுவரி முன் வந்து கூடினர். அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கிட்டதட்ட கைகலப்பு ஏற்படும் சூழல் உருவான போது திரு.வை.கோ தலையிட்டு சமாதானம் செய்தார். தலைவர்கள் இது போன்ற சமாதனங்கள் செய்ததோடு மற்றுமின்றி ஆங்கில செய்தி ஊடகங்களுக்கு பெரும் விருப்பத்துடன் பேட்டிகளை உணர்ச்சி பொங்க கொடுத்தார்கள். ஆனால் இதே ஆங்கில செய்தி ஊடகங்கள் முத்துக்குமாரின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தியதை அறிந்த மாணவர்களும் மற்றும் சில தமிழ் ஆர்வலர்களும் அச் செய்தி ஊடகங்களை அவ்விடத்தை விட்டு விரட்டி அடித்தனர்.

மாலை 3 மணிக்கு மேலாக பிரேத பரிசோதனை முடிந்து முத்துக்குமாரனின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. ஏறக்குறைய மாணவர்கள் வக்கீல்கள் திரைப்பட உதவி இயக்குநர்கள் மற்ற தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என சுமார் 300 பேர் கூடியிருந்தனர். தலைவர்கள் முத்துக் குமாரனின் சடலத்தை வண்டியில் போக்குவரத்துக்கு இடையூறின்றி விரைவாகக் கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தனர். ஆனால் இந்த 300 சொச்சம் பேரும் அதை ஏற்றுக் கொள்வதாய் இல்லை. கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி வாசலில் இருந்து ஈகா திரையரங்கம் வரை முத்துக்குமாரனின் சடலம் இருந்த வண்டி நகர ஏறக்குறைய 45 நிமிடங்கள் ஆனது. திரு.வை.கோவும் திரு.நெடுமாறனும் மாணவர்களிடம் விரைவாகச் செல்வோம் அனுமதி இல்லாமல் ஊர்வலம் போக முடியாது, நாம் ட்ராஃபிக்கை இடைஞ்சல் செய்கிறோம் என்றெல்லாம் கெஞ்சிப் பார்த்தார்கள். மாணவர்களும் மற்றவர்களும் கேட்காமல் போக வேறு வழியின்றி அவர்களும் நடந்தே வந்தார்கள் கெஞ்சிக் கொண்டு. (திரு.திருமாவும் திரு.ராமதாஸும் முன்பே சென்று விட்டிருந்தார்கள்)

ஈகா திரையரங்க சிக்னலில் இருந்து சிறிய சந்திற்குள் நுழைந்த பின் தலைவர்கள் தங்கள் வண்டியில் ஏறிக்கொள்ள வேகமாய் ஊர்வலத்தை நகர விடாமல் நடந்தே போக வேண்டும் என்று முயன்ற அந்த 300 பேரையும் காவல்துறை அடித்து கலைத்தது. பின்பு அவரவர் வசதிக்கு ஏற்ப யார் யாருடைய பைக்கிலோ ஏறிக்கொண்டு தலைவர்கள் போன வேகத்திற்கு முத்துக்குமாரனின் சடலத்தை பின் தொடர்ந்தார்கள். சென்னையின் பிராதன வீதிகளில் முத்துக்குமாரனின் சடலம் 40 கி.மீ வேகத்திற்கும் கூடுதலாகக் கொண்டு செல்லப்பட்டது. மாணவர்கள் மற்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர்கள் திரைப்பட உதவி இயக்குநர்கள் என எவருக்கும் அந்த வேகத்தில் உடன்பாடில்லை. ஏனெனில் சென்னையின் பிரதான வீதிகளைச் சில மணி நேரமாவது முடக்குவது என்பது செய்திகளில் ஒரு விதமான பாதிப்பை உண்டாக்கும் என நினைத்தனர். ஆனால் தலைவர்கள் ஏனோ இதைப் புரிந்து கொள்ளவில்லை.

மாலை 6 மணியளவில் கொளத்தூர் வணிகர் சங்க கட்டிடத்திற்கு அருகில் இருந்த சாலையில் முத்துக்குமாரனின் சடலம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அந்தச் சாலை பிரதான சாலை அல்ல. அச்சாலையை மறிப்பது சென்னையின் ஜீவனை எந்த வகையிலும் பாதிக்காது. வணிகர் சங்க கட்டிடம் என்பது 16 க்கு 10 அடி அளவுள்ள ஒரு அறை. மாலை 7 மணி வாக்கில் தலைவர்கள் அவ்வறையினுள் கலந்தாலோசித்தார்கள். நாங்கள் முத்துக்குமாரனின் சடலத்திற்கு அருகே நின்று கொண்டிருந்தோம். 8 மணி வாக்கில் தலைவர்கள் கிளம்பிப் போக திரு.வெள்ளையன் வெளியே வந்தார். திரு.வெள்ளையன் அறிமுகம் எனக்குக் கிடையாது. அவருடைய தம்பி இயக்குநர் திரு.புகழேந்தி(காற்றுக் கென்ன வேலி) மூலம் அவரிடம் பேசினேன். நாளை மதியத்திற்குள் முத்துக்குமாரனின் அடக்கம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடுகாட்டில் என்று தலைவர்கள் எடுத்த முடிவைக்கூறினார்.

நாங்கள் முத்துக்குமாரனின் கடிதத்தைக் கொண்டு அவரிடம் வாதம் செய்தோம்.

”1.தமிழகத்தில் இருந்து பலரும் செய்தி அறிந்து வந்து சேர ஒரு நாள் போதாது.

2.முத்துக்குமார் அவருடைய சடலத்தை ஆயுதமாக வைத்து போராடும் படி வேண்டி இருக்கிறார். எனவே போர் நிறுத்தம் வரும் வரை முத்துக்குமார் சடலத்தைப் பாதுகாக்க வேண்டும்.

3.முத்துக்குமார் சடலத்தை அருகில் உள்ள மயானத்திற்குக்கொண்டு செல்லாமல் சென்னையில் பிரதான மயானத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அம்மயானம் குறைந்த பட்சம் 15 கி மீ தூரத்திலாவது இருக்க வேண்டும்.

4.அல்லது முத்துக்குமாரின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி எடுத்துச் சென்றால் தென் தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சியை ஏற்படுத்த முடியும்.

திரு.வெள்ளையன் அனைத்துக் கருத்துக்களையும் பொறுமையாய்க் கேட்டுக் கொண்டார். தலைவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்றார். நாளை காலை தலைவர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என்றார். கூட்டம் வெகு குறைவாய் இருக்கிறதே? நாளை யாரும் வரவில்லை எனில் என்ன செய்ய முடியும் என்றார். இன்னமும் செய்தி பரவவில்லை என்றோம். வாகனம் ஏற்பாடு செய்து தந்தால் கல்லூரி விடுதிகளூக்கு செல்ல முடியும் என்றோம். மாணவர் நகலகம் அருணாச்சலத்தின் மகன் திரு செளரி ராஜன் வண்டிகளுக்கான பணம் கொடுத்தார். மாணவர்களோடு இயக்குநர் புகழேந்தியும் கல்லூரி விடுதிகளுக்கு கிளம்பிச் சென்றார்கள்.

நான் எனக்குத் தெரிந்த திரைப்பட இயக்குநர்களுக்குத் தகவல் சொன்னேன். இயக்குநர் சேரன் மறுநாள் காலை வருவதாக சொன்னார். இரவு 12 மணிக்கு மேல் கொளத்தூர் போனேன். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் (சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்கள்) வந்திருந்தார்கள்.

முத்துக்குமாரனின் சடலத்தோடும் நாங்கள் ஒரு 20 பேர் அன்றைய இரவு விழித்திருந்தோம். விடியலில் கூட்டம் வந்து விடும் என்று நம்பினோம். தமிழகம் எப்படி இந்த இரவிலும் உறங்குகிறதென கோபித்துக் கொண்டோம்.

ஜனவரி 30

வெள்ளிக் கிழமை

மெல்ல அந்த இரவு விடிந்தது.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி,

தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

புரட்சிகர இளைஞர் முன்னணி

பெரியார் தி.க

தமிழ் தேசிய விடுதலை இயக்கம்

தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி

மக்கள் கலை இலக்கியக் கழகம்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை(ஆனால் சுப.வீ வரவில்லை)

புரட்சிகர பெண்கள் விடுதலை இயக்கம்

போன்ற தமிழகத்தின் அனைத்து சிறிய அரசியல் அமைப்புகளில் இருந்து வீர வணக்கம் சொன்னபடி அவரவர் கொடிகளுடன் முத்துக்குமாரனின் சடலம் இருந்த வீதியை நிறைக்கத் தொடங்கினார்கள். கல்லூரி மாணவர்களின் கூட்டம் கூடத்தொடங்கியது. வெளியூரில் இருந்து மக்கள் வரத் தொடங்கினார்கள். குறைந்தது ஒரு 2000 பேர் முத்துக்குமாரனைச் சுற்றி நிற்கத்தொடங்கிய போது காலை 9 மணி.

ம.தி.மு.க தலைவர் திரு.வை.கோ, பா.ம.க தலைவர் திரு.ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திரு.திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு.பழ.நெடுமாறன், வணிகர் சங்கத் தலைவர் திரு.வெள்ளையன் ஆகியோர் வணிகர் சங்கத்தின் அச்சிறிய அறைக்குள் கூடினார்கள். அவர்களோடு பார்வையாளர்களாக இயக்குநர் சேரன், அறிவுமதி மற்றும் ஒரு 20 பேர் இருந்தனர். இவ்வாலோசனைக் கூட்டத்திற்கு வரவேற்கப்படாத மேற்சொன்ன சிறிய அரசியல் அமைப்புகள் முத்துக்குமாரனின் மேடைக்குப் பின்புறம் தங்களுக்குள்ளான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

”சனிக்கிழமை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முதல் கூட்டரங்கம் இருப்பதால் இன்றே தகனம் செய்ய வேண்டும்” – திரு.பழ.நெடுமாறன்.

திரு.வெள்ளையன் நேற்றிரவு நாங்கள் அவரிடம் சொன்னக் கருத்தைப் பதிவு செய்தார். அதற்குப் திரு.பழ. நெடுமாறன், ”சனிப் பொணம் தனியாய் போகாது, எனவே இன்றே எடுக்க வேண்டும்” என்றார். இவரின் இந்தக் கருத்திற்கு பார்வையாளர்களாய் இருந்த நாங்கள் சிரித்தோம்.

திரு.வெள்ளையன் மீண்டும் வாதம் செய்தார்.

“பொனத்தை வச்சுக்கிட்டு அரசியல் பண்றோம்னு கேவலமா பேசுவாங்கப்பா, எனவே இன்றே எடுத்துடுவோம்”- பா.ம.க திரு.ராமதாஸ்

”நாம் செய்யும் தாமதம் நம்மால் சந்திக்க இயலாத பிரச்சனைகளைக் கொண்டு வரும் எனவே இப்போதே எடுக்க வேண்டும்”என்று பொருள் பட – திரு.திருமாவளவன்.

திரு வை.கோ வும் இதே கருத்தைத் தெரிவித்தார். வெள்ளையன் விடாமல் தன்னால் இயன்ற வரை வாதம் செய்து கொண்டிருந்தார். “உங்கள் தேர்தல் அரசியலுக்காக முத்துக்குமாரனின் தியாகத்தை வீணாக்கக்கூடாது என எச்சரித்தார்”, தலைவர்களை.

இயக்குநர் சேரன் முத்துக்குமாரனின் இறுதிஊர்வலத்தை இரு நாளேனும் தள்ளிப் போட வேண்டிய அவசியத்தை தன்னால் இயன்ற வரை வாதிட்டார். திரு.திருமாவளவன் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் நீங்கள் அமைதியாய் இருங்கள் என அவரை பேசாமல் இருக்கச் சொன்னார். வெளியில் இருந்து மாணவர்கள் எனக்குச் செய்தி அனுப்பினார்கள் கைப்பேசிக்கு. “விடுதலைச் சிறித்தையினர் மாணவர்களை அடிக்கிறார்கள்”. நான் திரு.வன்னியரசிடம் சொல்ல அவர் அதை தடுப்பதற்காக வெளியேறினார். நானும் அவரோடு வெளியேறினேன். வெளியில் இருந்த மாணவர்களிடம் கூட்டம் நடைபெறும் விதத்தையும் தலைவர்களின் கருத்தையும் தெரிவித்தேன். மேடைக்குப் பின்புறம் இருந்த சிறிய அரசியல் கட்சிகளிடமும் தெரிவித்தேன். அனைவரின் மனநிலையும் தலைவர்களின் கருத்துக்கு எதிராய் இருந்தது. தலைவர்கள் வருமு்ன் மாணவர்கள் மேடையைக் கைப்பற்றினர். மேடையையும் மேடையைச் சுற்றியும் மாணவர்களும் சிறிய அரசியல்கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் தமிழ் ஆர்வலர்களும் இருந்தனர். பா.ம.க, ம.தி.மு.க ஆகிய இரு பெரும் அரசியல் கட்சியிலிருந்து எந்த தொண்டனும் வந்த பாடில்லை.

திரு.ராமதாஸும் திரு.வை.கோவும் தங்கள் தொண்டனையும் அழைக்காமலேயே அந்த இறுதி ஊர்வலத்தை அன்று நடத்த அறைக்குள் வாதிட்டுக் கொண்டிருந்தனர். நண்பகல் 11 மணி வாக்கில் திரு வெள்ளையன் ஒலிபெருக்கியில் தலைவர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவின் படி இன்னமும் 1 மணி நேரத்தில் இறுதி ஊர்வலம் தொடங்கும் என்று அறிவித்தார். மாணவர்களும் ஏனையோரும் ஏற்க முடியாது என்றனர். திரு.வெள்ளையன் பேசிக் கொண்டிருக்கையில் ஒலிபெருக்கியை அவரிடம் இருந்து வாங்கி நான் கூட்டத்தின் மனநிலையைப் பதிவு செய்தேன். வெள்ளையனுக்கு உள்ளூர சந்தோசமே. திரு.ராமதாஸு மேடைக்கு வராமலேயே கிளம்பிச் சென்றார் இதற்குப்பின் திரு.ராமதாஸ் வரவே இல்லை. திரு.வை.கோ பேச முயற்சி செய்தார்.

”யாரோடு உன் தேர்தல் கூட்டணி என்று சொல்லிவிட்டுப் பேசு”, என மாணவர்கள் ஒருமையில் அவரை பேச விடாமல் தடுத்தனர்.

”போதும் உன் உணர்ச்சி நாடகம்” என்று அவரை நோக்கி வசைகூட பேச்சை நிறுத்தி விட்டார். திரு.திருமாவளவனும் பேச வில்லை. தலைவர்கள் கிளம்பிச் சென்றார்கள். கிளம்பும் முன் திரு நடேசனின் அறிக்கையை திரு.வை.கோ கூட்டத்திற்கு முன் வாசித்தார்.

மேடை இதற்குப் பின் முழுக்க மாணவர்கள் வசமானது.

மாணவர்கள் அதற்குப்பின் அரசியல் கட்சிகள் தங்கள் கொடிகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி அதை நிறைவேற்றினார்கள். ஒலி பெருக்கி மாணவர் வசமானது. மேடை புலிக் கொடி வசமானது. கூட்டம் கூடியவாறே இருந்தது. சாலை முழுவதும் அடங்காத கூட்டம்.

கையில் லத்தியுடன் இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் படைசூழ முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்த வந்த புரசை எம்.எல்.ஏ.(தி.மு,க) வி.எஸ்.பாபு செருப்பு, கற்கள் வீசி துரத்தியடிக்கப்பட்டார். தலைதெறிக்க அவர் ஓடிய காட்சி அருமையாக இருந்தது. அண்ணா திமுக மதுசூதனன் மலரஞ்சலி செலுத்தினார். இவர், “போர் என்றால் அப்பாவி மக்கள் சாகத் தான் செய்வார்கள்“ என்று முழங்கிய அம்மாவின் தொண்டன்.

முத்துக்குமாரனின் சடலத்தை அன்று சூழ்ந்திருந்த மாபெரும் கூட்டம் அரசியல் கட்சி சாராதது. எந்த அரசியல் கட்சிக் கொடியையும் ஏந்தாதது.

தமிழகம் முழுவதும் இருந்து கூட்டம் திரண்டிருந்தது. முத்துக்குமார் நிஜமாகவே ஒரு எழுச்சியை ஏற்படுத்திவிட்டான். எந்த பெரிய அரசியல் கட்சியும் கையில் எடுக்காமல் வகைப்படுத்தாமல் விட்டும் சாரை சாரையாய் மக்கள் அஞ்சலி செலுத்த வந்து கொண்டிருந்தனர்.

வந்த கூட்டம் நம்பிக்கைக் கொடுத்தது. போர் நிறுத்தம் வரும் வரை முத்துக்குமாரனின் சடலத்தைக் கொண்டு போராட வேண்டும் என்று மாணவர்கள் மற்றவர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டிருந்தார்கள். திரு.வெள்ளையன் மருத்துவர் ஒருவரை வரவழைத்து முத்துக்குமாரனின் சடலத்தைப் பரிசோதித்தார்.

ஏதேனும் மருந்துள்ளதா சடலத்தைப் பேண என வழி கேட்டார். மருத்துவர் அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரம் எனக் கையை விரித்தார். நேற்றே மருந்து ஏற்றியிருக்க வேண்டும் என்றார். செய்வதறியாது நின்றோம்.

இரவும் வந்தது. கூட்டம் மெல்ல நகரத் தொடங்கியது. நாளையும் சடலத்தை எடுக்கக் கூடாது என்பதைத்தவிர மாணவர்களிடமும் ஏனையோரிடமும் அரசியல் ரீதியான செயல்பாடு எதுவும் இல்லை. நாளை அரசியல்வாதிகளிடமிருந்து முத்துக்குமாரின் சடலத்தை எப்படிக் காப்பாற்றுவது என்பதே அவர்கள் முன் இருந்த சவாலாக அவர்களுடைய உரையாடல்கள் அமைந்திருந்தன . இரவு திரு.வை.கோ வந்தார். மாணவர்களிடம் அமர்ந்து அவர்களின் எழுச்சியைப் பாராட்டினார், தானும் அவர்களைப் போல்தான் ஒரு காலத்தில் இருந்தேன் என்றார். மனசாட்சி உறுத்தி வந்தாரா? இல்லை காலையில் பழுதான அவரின் முகத்தைச் சரி செய்ய வந்தாரா தெரியவில்லை என மாணவர்கள் அவர் போனபின் சொல்லிச் சிரித்தார்கள். .

ஜனவரி 31

சனிக்கிழமை

மாணவர்கள் கூட்டம் நிறைந்து இருந்தது. மேடை அவர்களின் வசமே இருந்தது. கட்சிக் கொடிகள் மேடைக்கு வரக் கூடாது என்ற கோரிக்கையை மாணவர்கள் முன் வைத்தார்கள். பெரும் கட்சியிலிருந்து சிறுகட்சி வரை அக்கோரிக்கையை ஏற்று கட்சிக் கொடி இல்லாமல் மேடைக்கு வந்து மரியாதை செலுத்தினார்கள். புலிக் கொடி மேடையை அலங்கரித்தது. மதியம் வரை தலைவர்கள் யாரும் வந்தபாடில்லை. குறைந்தப் பட்சம் 10000 பேராவது அன்று மரியாதை செலுத்தினார்கள். திரைப்படத் துறையிலிருந்து இயக்குநர்கள், நடிகர்கள், உதவி இயக்குநர்கள் இன்னும் மற்றத் துறையினரும் வந்தவாறு இருந்தார்கள். இயக்குநர் சங்கத்தின் பிரதிநிதிகள் அனைவரும் வந்திருந்தார்கள்.

நடிகர்களில் மன்சூர் அலிகான் வந்தது நினைவு இருக்கிறது. இயக்குநர்களில் பாரதிராஜா,அமீர், ஆர்.கே.செல்வமணி,சேரன், சுப்ரமணிய சிவா, சரவண சுப்பையா, சீமான் வந்தது என் நினைவில் இருக்கிறது. இறுதி ஊர்வலம் அன்று வேண்டாம் என்பதும் ஈழத்தில் சமாதானம் வரும் வரை போராடுவோம் முத்துக்குமாரன் தந்த அவன் உடல் என்ற ஆயுதத்தோடு என மாணவர்கள் மேடையில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்கள். இரண்டு மணி வாக்கில் வை.கோ வந்தார். முத்துக்குமாரனின் சடலத்திற்கு முன் இருந்த பந்தலில் அமர்ந்தார். கட்சிக் கொடி கொண்டு வர வேண்டாம் என்று தன் கட்சிக் காரர்களைக் கேட்டுக் கொண்டார். மாணவர்கள்தான் முன்பிருந்து நடத்த வேண்டும் என்று ஒத்துக் கொண்டார். பொழிலனின் உறவினர் வழக்குரைஞர் அங்கயற்கன்னி என்ற கயல்தான் ஒலிபெருக்கியில் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்திப் பேசிக் கொண்டிருந்தார். மன்சூர் அலிகானின் பேச்சு மிகுந்த உத்வேகத்தை கூட்டத்தினருக்குத் தந்தது.

3 மணி நெருங்கும் போது திரு.திருமாவளவன் தன் கட்சியினருடன் வந்தார். அவரது கட்சியினர் மேடையில் ஏற மேடைக் கூட்டத்தின் அளவு கொள்ளாமல் ஆடியது, வழக்குரைஞர் அங்கயற்கன்னி என்ற கயல் மாணவர்கள் தான் முன் நின்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் வைக்க, அதைப் பொருட்படுத்தாமல் ஏறக்குறைய ஒலிபெருக்கியை அவரிடம் இருந்து பிடுங்கினார். அதன் பின் மேடையும் நிகழ்வும் அவர் மற்றும் அவர் தொண்டர் வசமானது.

3 மணிக்கு முத்துக்குமரனின் இறுதி ஊர்வலம் தொடங்கும் என அறிவித்தார். ஊர்வலத்தின் பாதையை இயக்குநர் புகழேந்தியும், கவிஞர் அறிவுமதியும் முன்பே எழுதி காவல் துறை வசம் ஒப்படைத்திருந்தனர். பெரம்பூரில் இருந்து ஓட்டேரி, புரசைவாக்கம், சூளை ஹை ரோட், யானை கவுளி, வால்டேக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் இடுகாட்டை அடைவது என்பதுதான் இறுதி ஊர்வலத்தின் வழி. காவல்துறையினர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் இடுகாட்டிற்குப் போனால் போதும் என்பதே அவர்களுடையதும் அரசாங்கத்தின் மனநிலையும் என ஜனவரி 30 இரவு காவல்துறையினரிடம் பேசிய திரு.வெள்ளையன் எங்களிடம் சொன்னார். அரசாங்கம் எந்த விதத்திலும் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலத்தை தொல்லை செய்ய விரும்பவில்லை. இன்னும் சொல்லப் போனால் அரசாங்கம் முத்துக்குமாரனின் சடலத்திடம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. மூலக்கொத்தளம் இடுகாட்டை சிபாரிசு செய்தவர் திரு.திருமாவளவன். மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம் அங்கிருப்பதாலே அவர் அதனை சிபாரிசு செய்வதாய் சொல்லியிருந்தார். இக்காரணத்தினால் பெசண்ட்நகர் இடுகாடு போன்ற பரீசீலனைகள் நிராகரிக்கப்பட்டன.

ஊர்வலம் தொடங்கியது. அரசியல் கட்சியைச் சேராத பலரும் மாணவர்களும் மற்ற அரசியல் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இயக்குநர் அமீர் முத்துக்குமாரனின் சடலம் இருந்த வண்டியில் ஏறி சடலத்திற்கு அருகில் அமர்ந்து வந்தார். அவர் விளம்பரம் தேடுகிறார் இறங்க வேண்டும் என அவரிடம் கீழ் இருந்த பலரும் வாதிட்டுக் கொண்டிருந்தனர், மாணவர் ஒருவர் அவரிடம் என்னைச் சொல்லச் சொல்லுமாறு சொன்னார். நான் இயக்குநர் சுப்ரமணிய சிவாவிடம் சொன்னேன். அவர் அமீரிடம் சொன்ன போது அமீர் தன் நோக்கம் விளம்பரம் தேடுவது அல்ல என மறுத்தார். இருட்டிய பின் வண்டியிலிருந்து இறங்கினார்.

அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்த தோழர் திரு.வெள்ளையன் ஊர்வலத்தின் இறுதியில் மாட்டிக் கொள்ள முத்துக்குமாரனின் சடலம் ஊர்வலத்தின் நடுவே வர திரு.வை.கோ அதற்கு முன்னும், திரு.திருமாவளவன் ஊர்வலத்தின் தொடக்கத்தில் நின்றும் வழி நடத்திச் செல்ல கண்ணுக்கெட்டிய தூரம் வரை புலிக் கொடிகளும் தலைவன் பிரபாகரனின் உருவப்படங்களும் மனிதக் கூட்டமும் தெரிந்தது. அப்பகுதி கடைகள் வணிகர் சங்கம் கடையடைப்பு அறிவித்திருந்த காரணத்தால் மூடப்பட்டிருந்தன.

பெரம்பூர் அடிப்பாலம் அருகே ஊர்வலத்திற்கு முன் சென்ற திரு.திருமாவளவன் ஒரு வேனின் மீது ஏறி நின்றவாறு ஊர்வலத்தின் பாதையை பெரம்பூர் புறவழிச் சாலைக்குத்திருப்பினார்.

முன் சென்ற ஒரு அணி அப்பாதையில் திரும்பிச் சென்றது. அவர்களுக்குப் பின் வந்த மற்ற அணியில் இருந்த மாணவர்களும் அரசியல் கட்சி சாராத சிலரும் அப்பாதையில் செல்ல முடியாது, ஏற்கனவே முடிவு செய்த ஓட்டேரி ,புரசைவாக்கம் வழி செல்ல வேண்டும் என்ற கோரிக்கையுடன் சாலையில் அமர்ந்து ஊர்வலத்தை தடுத்தார்கள்.

மற்றத் தலைவர்கள் யாரும் அவ்விடத்தில் இல்லை. தகவல் அறிந்து இயக்குநர் சேரன் அவர் உதவியாளர்களுடன் அவ்விடத்திற்கு விரைந்து வந்தார். அமர்ந்து இருந்தவர்களை வன்னியரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார். அதில் மூவருக்குப் பலத்த அடி. அவர்கள் பின்பு என்னிடம் முறையிட்டார்கள். இயக்குநர் சேரனுக்கு திரு.திருமாவளவன் நடந்த வாறே விளக்கம் சொன்னார், புரசைவாக்கம் பகுதியில் ஊர்வலத்தில் வன்முறையை ஏற்படுத்த சிலர் சதி செய்து உள்ளனர் அதனால்தான் தான் வேறு வழி இன்றி பாதையை மாற்றினேன் என்றார்.

நடந்து வந்த திரு.வை.கோ வும் வண்டியில் வந்த திரு.பழ. நெடுமாறனும் இது குறித்து எதுவும் யாரிடமும் கேட்கவில்லை. யார் சொல்வதில் எது உண்மை என அறியாமலே நாங்கள் ஊர்வலத்தில் நின்றோம். மாற்றி விடப்பட்ட புற வழிச் சாலையில் வீடுகளோ கடைகளோ இல்லை. ஒரு புறம் பெரிய மதில் சுவர், மறுபுறம் ரயிலடி. 3 கிலோமீட்டர்கள் யாரும் இல்லாத அச்சாலையில் ஊர்வலம் நகர்ந்தது. சாலையின் எதிர் புறத்தில் இருந்து ஒரு வண்டியும் வந்த பாடில்லை.காவல் துறையினர் ஊர்வலம் திரும்பிய உடனேயே வண்டிகளின் போக்குவரத்தை தடுத்திருக்கலாம். அல்லது கூட்டத்தின் பெரும்பான்மைக்குத் தெரியாத ஊர்வலப்பாதை அவர்களுக்கு முன்பே தெரிந்தும் இருக்கலாம். புறவழிச் சாலையில் நகரத்தொடங்கிய சிரிது நேரத்திற்கெல்லாம் மின்சாரம் போனது.

அதற்குப் பின் மூலக்கொத்தளம் போக ஆன அந்த 6 மணி நேரத்திலும் மின்சாரம் ஊர்வலம் போன எந்தப் பாதையிலும் இல்லை. அங்கங்கே மக்கள் மெழுகு வர்த்தியுடன் நின்றார்கள். கூட்டத்தின் பின்புறம் இருந்து எப்படியோ ஒரு M80 யில் தொற்றி முன் செல்ல முயன்று கொண்டிருந்த திரு.வெள்ளையன் எங்களைக் கடந்தார்.

அவரிடம் இயக்குநர் சேரன் திரு.திருமாவளவன் பாதையை மாற்றுவதற்காய் சொன்ன காரணத்தைச் சொன்னார். அதற்கு திரு.வெள்ளையன் ” புரசைவாக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு கடையும் வணிகர் சங்கத்திற்கு உட்பட்டது. புரசைவாக்கம் எங்களுடைய கோட்டை, அங்கு அப்படி நடக்க வழியில்லை, ஏன் மாற்றினார் பாதையை என்பது எனக்கு விளங்கவில்லை” என்று சொல்லிப் போனார். அவரின் சகோதரர் புகழேந்தி பாதை மாறிய வருத்தத்தில் ”முத்துக்குமாரனின் ஊர்வலம் ஆளற்ற மின்சாரம் அற்ற பாதையில் பொகிறதே, அவன் தியாகம் இருட்டடிக்கப்பட்டதே” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கண் கலங்கினார். யார் என்று தெரியாத ஒருவர் சொன்னார், ”இப்பகுதி விடுதலைச் சிறுத்தை” கட்சியின் உறுப்பினர்கள் அதிகமாய் உள்ளப் பகுதி, அவர்களிடம் தன் முக்கியத்துவத்தை உணர்த்த திருமாவளவன் பாதையை இப்பக்கம் திருப்பி இருக்கலாம், மூலக் கொத்தளத்தை தேர்வு செய்யவும் இதே காரணமாய் இருந்திருக்கலாம் என்று அவருடைய கருத்தைச் சொன்னார்.

எது எப்படியோ மின்சாரம் இல்லாத தெருக்களின் வழியாய் முத்துக்குமாரும் அவனுடைய தியாகமும் இருள் வீதிகளில் போனது. ஊர்வலத்தின் முன் பகுதி இடுகாட்டினுள் சென்றுவிட முத்துக்குமாரனின் சடலம் அவன் வார்த்தையில் சொல்வதாய் இருந்தால் அவன் நமக்குத் தந்த ஆயுதம் இடுகாட்டினுள் வந்த பாடில்லை. மாணவர்களும் மற்றவர்களும் பாலத்தில் அமர்ந்து மறியல் செய்கின்றனர் சடலத்தை விட மறுக்கிறார்கள் என்று தகவல் வர தலைவர்கள் தங்களால் வந்து பேச இயலாது, அளவுக்கு மீறிப் போகிறார்கள் என்றார்கள். இயக்குநர் சேரனுடன் பாலத்திற்குச் சென்றேன். செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள்(சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்கள்), மூன்று நாட்களாய் முத்துக்குமாரனோடு இருந்தவர்கள், சில மணி நேரத்திற்கு முன் வன்னியரசால் வலுக்கட்டாயமாக சாலை மாறிய போது தள்ளப்பட்டவர்கள் அரசியல் கட்சி சாராதோர் சிலர் என ஒரு 300 பேர் முத்துக்குமாரனின் உடல் இருந்த வண்டி முன் மறியல் செய்து கொண்டிருந்தார்கள். தமிழகம் முழுவது கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அரசாங்கம் அறிவித்தது அப்போதுதான் அவர்கள் வாயிலாக எங்களுக்குத் தெரிந்தது. கல்லூரி விடுமுறையானால் மாணவர்கள் ஒன்று சேர இயலாது ,போராட்டங்களை முன்னெடுக்க முடியாது, முத்துக்குமாரின் தியாகம் விழலுக்கு இரைத்த நீராகிவிடும், எனவே கலைஞர் இல்லத்திற்கோ தலைமைச் செயலகத்திற்கோ முத்துக்குமாரனின் சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. எங்களால் பதில் சொல்ல இயலாமல் நாங்கள் திகைத்தோம். அவர்களின் பார்வையும் புரிதலும் சரியாகவே இருந்தது. வன்னியரசும் பேசிப்பார்த்தார். இறுதியில் வலுக்கட்டாயமாக ஊர்வலத்தை இடுகாட்டிற்குள் திருப்பினார்கள்.

நானும் சேரனும் முன் சென்றோம். தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தோம். தலைவர்கள் மிகுந்த எரிச்சலில் இருந்தார்கள். திரு.பழ. நெடுமாறன் ”இவங்கல்லாம் மாணவங்களே இல்லை” என்றார். திரு.வை.கோ அரஜாகவாதிகள் எனப் பொருள் படச் சொன்னார். முத்துக்குமார் நமக்கு தந்த ஆயுதம் எரியூட்டப்பட்டது. அதற்குப்பின் மேடையில் அனைவரும் வீர உரையாற்றினார்கள்.


ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்..! வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அளித்த இறுதி மடல்.

https://www.thaarakam.com/news/b8e9da59-0bbc-4715-a9b6-6200ecf79866 

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்..! வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அளித்த இறுதி மடல்.

breaking

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்……!

“தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமார் அளித்த இறுதி மடல்”


 அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…

 வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

 

 

 ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

 ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

 ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

 கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் – இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ”தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா”னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…

 பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

 ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது – இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய – இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

 இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள்  என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

 தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

 

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…

 உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

 

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே…

 உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் – அதுதான், இந்திய உளவுத்துறை – ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா… இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.

 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

 

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே…

 அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான்.

 தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

 

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று… நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

 புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா – என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

 இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

 

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலா காலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல… இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்… எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக் கொள்வதென்றாலும் கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

 

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

 

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

 

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

 

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

 

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

 

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

 

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

 

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷ, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

 

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

 

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வன்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

 

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

 

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

 

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

 

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

 

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

 

என்றும் அன்புடன்,

 அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,

 கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99


செவ்வாய், 20 ஜனவரி, 2026

1984 ம் ஆண்டு ஜெயவர்தனேவிடமிருந்து தமிழ் மாணவர்களை காப்பாற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள்

https://www.thaarakam.com/news/91029494-a0c9-41f6-838f-3ee997dc0c77 

1984 ம் ஆண்டு ஜெயவர்தனேவிடமிருந்து தமிழ் மாணவர்களை காப்பாற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள்

breaking

1984 ம் ஆண்டு இனப்படுகொலையாளி ஜெயவர்தனேவிடமிருந்து   தமிழ் மாணவர்களை  காப்பற்றிய  தமிழீழ விடுதலைப் புலிகள் 


"அதிகளவு சுதந்திரமும்'', 'மனிதநேயமும்', 'ஜனநாயகமும்' காப்பாற்றப்படுவதாக உலகத்தோர் நம்பும் இங்கிலாந்தின் ஆதிக்கத்திற்கு எதிராக ஐரிஷ் மக்கள் ஆயுதம் தாங்கிப் பல்லாண்டு காலமாகப் போராடி வருகின்றனர். சென்ற சில ஆண்டுகளுக்கு முன் பொபிசாண் ட்ஸ் உட்பட ஆறு ஜரிஷ் விடுதலை வீரர்கள் இங்கிலாந்து சிறையில் சாகும்வரை உண்ணா விரதம் இருந்தபோது அவர்களது கோரிக்கைகளை ஏற்காமல், தட்சர் அரசு விடுதலை வீரர்களை '1984 ம் ஆண்டு இனப்படுகொலையாளி ஜெயவர்தனேவிடமிருந்து தமிழ் மாணவர்களை காப்பாற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் 'பயங்கரவாதி''களாக வர்ணித்து இரக்கமற்ற முறையில் அவர்களை இறக்கவிட்டது. 

அவ்வாறிருக்க, இன்று உலக நாடுகளால் • நவீன ஹிட்லர்' என வர்ணிக்கப்படும் ஜெயவர்த்தனாவின் இனவெறியரசு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு செவிமடுத்து மாணவர்களின் உரிமையை வழங்கும் என்பது அறியாத்தனமாகும். மாணவர்களின் இந்த உண்ணாவிரதப் போராட்டமானது ஆயுதப் போராட்டமே சரியான வழியென்பதை மீண்டும் 

நிரூபித்துள்ளது. ஏன் மாணவர்களை அழைத்துச் சென்றோம்?

நாம் ஏற்கெனவே உண்ணா விரதம் பற்றிய எமது நிலைப்பாட்டை மக்களுக்குத் தெளி வாக விளக்கியிருந்தோம். தமிழீழமே தமிழ்  மாணவர்  விடிவுபெற வழி சமைக்குமென்றும் காலங்காலமாகத் தோல்வியுற்ற அகிம்சைப் போராட்டங்கள் பயனற்றவை யென்றும் தற்போதைய சூழலில் ஆயுதந்தாங்கிய போராட்டத்திற் பூக்களைத் தயார்படுத்தலே , அவசியமான தென்றும், 

மாணவர்களது கடமையும் தமிழீழ விடுதலைக்கு தங்கள் பங்களிப்பை நல்குவது தான் என்றும் கோரிக்கை விடுத்தோம். 

நாம்    எதிர்ப்பார்த்தது போலவே சிங்கள அரசு அகிம்சை வழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்க திட்டங்களை தீட்டியது அகன் முதற்கட்டமாக பல்கலைக்கழகத்தை மூட உத்தரவிட்டது. அதன் அடுத்த கட்டமாக, 

உண்ணாவிரதிகளை பலாத்காரமாக கடத்த  தருணம் பார்த்துக் கொண்டிருந்தது. உண்ணாவிரதிகளில் ஒருவரோ மரணத்துடன் போராடிக்கொண்டிருந்தார், வைத்தியர் வந்து பார்த்து அபாய நிலையிலுள்ளார் எனவும் உடன் வைத்தியசாலைக்கு அனுமதிக்குமாறும் இல்லையேல் பயன் தராது எனவும் அறிவித்தார். மற்றைய உண்ணாவிரதிகளும் கவலைக்கிடமான நிலையில், மக்களோ இவர்களை அநியாயமாகப் பலி கொடுக்கக் கூடாது என விரும்பினார்கள் கடந்த இனப் படுகொலையில் எண்ணற்ற தமிழர்களை இழந்த நாம் அநியாயமாக  ஒன்பது உயிர்களை சாக விடுவதா? அதுவும் உரிமைக்காக தம்முயிரைத் தியாகம் செய்ய விழைந்தவர்களைப் பலிகொடுப்பதா என எண்ணினோம். அரசுப்படைகள் அவர்களைத் தூக்கிச் சென்று ஏற்கெனவே வெலிக்கடையில் கொன்றது போல் சாகடிக்கும் முன்னர், மக்களின் முன்னணிப் படையாகிய நாம் உண்ணாவிரதிகளை அழைத்துச் சென்று காப்பாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் எமது இயக்கம் உண்ணாவிரதிகளை அவர்களின் பூரண சம்மதத்துடன் அழைத்துச் சென்றது. இன்று அவர்கள் எமது வேண்டுகோளுக்கு இணங்கி உணவு அருந்தி  உடல் நிலைதேறி வருகின்றனர்.

நாம் ஆயுதந் தாங்கி வந்தது மக்களையோ மாணவர்களையோ தாக்க அல்ல எதிரிகளிடமிருந்து எம்மையும் உண்ணாவிரதிகளையும் காக்வே. இதை விளங்காத சில ஞானசூனியங்கள் நாம் அவர்களை ஆயுதமுனையில் கடத்திச் சென்ற தாகவும்,  பொய்ப்பிரச்சாரம் செய்தும் எமது இயக்கத்தைக் களங்கப்படுத்துவதுடன் மக்களையும் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பொய்ப்பிரச்சார முகமூடியைக் கிழித்து உண்மையை மக்கள் உணர்வார்கள் என்பது உறுதி. மாணவர்கட்கு சரியான வழியைக் காட்டுவதை விடுத்து இயக்கங்கள் ' சில உரிமை கிடைக்கும் வரை போராடு' என்று இனவாத  அரசிடம் உரிமைகளை எதிர்பார்க்கச் சொல்லி கோசங்களை இடுவதும் சுவரொட்டிகளை ஒட்டுவதும் ' உண்ணாவிரதத்தை ஆதரிக்கின்றோம்' என்று . கடந்தகால வரலாற்றை திரும்பிப் பார்க்கமல் அவற்றின் படிப்பினைகளை உணராமல் கூறுவதும் மாணவர்களைப் பலியாக்கும் முயற்ச்சியாகும். 

இதனை மக்களும், மாணவர்களும் நன்குணர்ந்து விடுதலைக்கான  பாதையில் அணிதிரள்வார்கள் என்பது உறுதி.


வெல்க தமிழீழம்


புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்


வெளியீடு:- பிரச்சார வெளியீட்டு வாரியம், தமிழீழ விடுதலைப் புலிகள் 

​



நன்றி 

தமிழீழ ஆவணக்காப்பகம் 

செவ்வாய், 13 ஜனவரி, 2026

நாங்கள் போராடுவது தமிழர்களுக்காக மட்டுமல்ல; முஸ்லிம் மக்களுக்கும் - தமிழீழத் தேசியத்தலைவர்

https://www.thaarakam.com/news/debc347a-148a-48d0-97b2-c7297dcfbb73 

நாங்கள் போராடுவது தமிழர்களுக்காக மட்டுமல்ல; முஸ்லிம் மக்களுக்கும் - தமிழீழத் தேசியத்தலைவர் 


breaking

தமிழீழ விடுதலைப் போராட்டம், முஸ்லிம் சமூகத்துடன் தொடர்பான நிலைப்பாடு: குற்றச்சாட்டுகளும் வரலாற்றுப் பின்னணியும்

தமிழீழத் தேசியத்தலைவர்  வே. பிரபாகரன், அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழர்களுக்காக மட்டுமல்ல, தமிழர்களுக்கு கிடைக்கும் சம அந்தஸ்தும் உரிமைகளும் முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாக அவரது சமகால அரசியல் சந்திப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் வெளிப்பாடாக, 2002ஆம் ஆண்டு, முஸ்லிம் அரசியல் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் நேரடியாக, “நாங்கள் போராடுவது தமிழர்களுக்காக மட்டுமல்ல; தமிழர்களுக்கு கிடைக்கும் உரிமைகள் முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்கும்” என அவர் கூறியதை இன்று மீண்டும் சில அரசியல் தெளிவற்ற ஆட்களுக்கு நாங்கள்   பதிவு செய்கின்றோம் . 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலேயே முஸ்லிம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் பின்னர் த.வி.பு. அமைப்பில் இணைந்தனர்; அவர்களில் பலர் தளபதிகளாகவும் திறமையான போராளிகளாகவும் செயல்பட்டனர் . 




ஆனால், இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு, இந்திய புலனாய்வு அமைப்பான ‘ரோ’ (RAW) தமிழீழத்தில் இயங்கிய பல ஆயுத இயக்கங்களில் தீவிரமாக தலையீடு செய்து, அவற்றை தவறான வழிநடத்தல்களுக்குள் இட்டது  இதன் விளைவாக, சில மாற்றியக்கங்கள் சொந்த மக்கள்மீதே வன்முறைகள் புரியத் தொடங்கியதாகவும், 

இதை   தேசியத்தலைவர் பிரபாகரன் கடுமையாக எதிர்த்தார் . மக்கள் பாதுகாப்பே போராட்டத்தின் அடிப்படை என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய அவர், மாற்றியக்கங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முயன்றது இந்திய அரசுக்கும் அதன் இராணுவத்துக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்பதே   நிதர்சனம் .

 இதன் தொடர்ச்சியாக இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் தலையீடு செய்ததும், அதில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் பெரும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்ததும் வரலாற்று உண்மைகளாக உள்ளன. 

பின்னர், புலிகளை பலவீனப்படுத்தும் நோக்கில் பல சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதில் ராஜீவ் காந்தி படுகொலை விவகாரம், மாத்தையா பிளவு முயற்சி உள்ளிட்ட பல சம்பவங்கள் குறிப்பிடப்படுகின்றன. இத்தொடர்ச்சியில், சில முஸ்லிம் போராளிகளை பயன்படுத்தி தலைமையை இலக்காக்கிய முயற்சிகளும் நடைபெற்றதாகவும், அவை  பொட்டுஅம்மான் அவர்களின்  புலனாய்வு நடவடிக்கைகளால் முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

விசாரணைகளின் போது, சில பகுதிகளில் சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவங்கள், இனங்களுக்கு இடையிலான நீண்டகால பிளவுக்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என கருதி, போராட்டத்தின் பாதுகாப்பு மற்றும் தலைமையின் நிலைத்தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 1990ஆம் ஆண்டு   யாழ் பகுதிகளில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட தீர்மானம் எடுக்கப்பட்டதாக புலிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 



இந்த முடிவு ஒரு இன விரோதக் கொள்கை அல்ல, போராட்டத்தின் தொடர்ச்சியை பாதுகாக்க எடுத்த கடினமான அரசியல் தீர்மானம் . மேலும், முஸ்லிம் மக்கள் ஒரு தனித்த தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் கொண்டிருந்ததற்கான சான்றாக, 2002ஆம் ஆண்டு ரவூப் ஹக்கீமை முஸ்லிம் மக்களின் தேசிய அரசியல் தலைவராக மதிப்பளித்த சம்பவம் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆகவே, முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான துரோகம் என்ற குற்றச்சாட்டுகள் ஒரே கோணத்தில் முன்வைக்கப்படாமல், அக்கால அரசியல், இராணுவ, புலனாய்வு சூழல்கள் மற்றும் அதன் விளைவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வரலாற்றுப் பின்னணியுடன் மதிப்பிடப்பட வேண்டும் .



இந்திய   உளவுத்துறை ரோ வின்  பரப்புரையை நம்பிக்கொண்டு   எங்களுக்குள் முரண்படுவதை தவிர்த்து வரலாற்றில் என்ன   நடந்தது  என்ற தரவுகளின் அடிப்படையில்  அனைத்து தமிழர்களும் மதங்கள் கடந்தது ,சாதிகள் கடந்து தமிழின மக்களாக  தமிழீழ விடுதலைக்கு  ஓரணியில் செயற்பட வேண்டும் 



 முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களால் உயர்வாக போற்றப்படும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் குறித்த வாழ்த்து செய்தியானது தமிழீழத் தேசியத் தலைவர் அகவை 50 சிறப்பு வெளியீடாக வெளியீடு செய்யப்பட்ட தலைநிமிர்வு தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட சில காட்சிகளை தொகுத்து  எமது   வாசகர்களுக்கு வழங்குகின்றோம்