சனி, 27 பிப்ரவரி, 2021

காலத்தின் சாட்சிகள் ஆதிலட்சுமி

https://www.thaarakam.com/news/131216 

காலத்தின் சாட்சிகள் சிறுகதை ஆதிலட்சுமி

https://yarl.com/forum3/topic/242564-காலத்தின்-சாட்சிகள்-–-ஆதிலட்சுமி-சிவகுமார்…/

காலத்தின் சாட்சிகள் – ஆதிலட்சுமி சிவகுமார்….

உண்மை சம்பவத்தை தழுவிய சிறுகதை

On May 17, 2020

வலைஞர்மடம் கத்தோலிக்க தேவாலயத்தின் சுற்றாடலில் ஒரு கல்வீடு. அந்த வீட்டைச் சுற்றியிருந்த வெளிமுமுவதும் சனங்கள். திருவிழாக்கால வீதிகள்போல தோற்றங்காட்டியது அந்நிலப்பகுதி.

மேலே வானம் வில்லாய் வளைந்திருந்தது.

ஒவ்வொரு இடத்திலும் படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைய…. நகர்ந்து நகர்ந்து வலைஞர்மடம் என்ற இந்த கடலோரக் கிராமத்தை வந்தடைந்துவிட்டோம்.

01-7.jpgமேலே அடிக்கடி வந்து சுற்றிச் சுழன்று மிரட்டிவிட்டு… எங்காவது குண்டுகளைத் தள்ளிவிட்டுப் போகும் விமானங்கள்.  கூடவே எறிகணைகளின் இரைச்சலும் வெடிப்புகளும்….. தூரத்தே இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கும் வேட்டொலிகள்…..

சனங்கள் ஆற்றாமையோடும் அழுகையோடும் அச்சத்தோடும் இருந்தார்கள்.

அபூர்வமாய் அந்தவெளியில் ஒருகாட்டுமரம். அங்கொன்றும் இங்கொன்றுமாக நீட்டியிருந்த கிளைகளில் கொஞ்சமாய் இலைகள். எஸ்கிமோவர்களின் பனிவீடுகளை நினைவுபடுத்தும் சனங்களின் தறப்பாட் கொட்டில்கள்….. இடைவெளிகளற்று நிறைந்து கிடந்தன…..

சனங்களின் மனங்களைப் போல…. அடுப்புகள் ஆங்காங்கே புகைந்துகொண்டிருந்தன…..

மரம் ஒன்றிற்கும்  ஒரு தறப்பாட் கொட்டிலுக்கும் இடையே கிடந்த சிறிய இடைவெளியில் இடம்பிடித்து நானும் என்னோடுவந்த இன்னொரு குடும்பத்தின் ஐவருமாக அமர்ந்துகொண்டோம்..

பேய்க்களை என்பார்களே…. அதற்கும் மேலாக களைத்துப்போயிருந்தோம். ஆனாலும் எறிகணைகள் துரத்திக்கொண்டுதான் இருந்தன.

மணல்தறை என்பதால் பாதுகாப்பு குழிகள் வெட்ட இயலாது. வெட்டுவதற்கும் சனங்களிடம் தெம்பில்லாதிருந்தது.

அந்தவீட்டின் ஒரேயொரு கழிப்பறை. எந்தநேரமும் வரிசையில் நிற்கும் பெண்கள். எல்லாமே எங்களுடைய சனங்கள் தான். சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தது…. வயதானவர்களும், காயமுற்ற சிலரும் இலையான்கள் மொய்க்கக் கிடந்தார்கள்.

நடமாடும் வலுவுள்ள ஆண்கள் பெரும்பாலும் இரவுகளில் கடற்கரையை கழிப்பிடமாக்கினார்கள்.

சிலநாட்களாக குளிக்கவோ… கடன்களைக் கழிக்கவோ எமக்கு  இடமில்லை. கழிப்பறை வரிசையில் நின்று நின்று நலைகுலைந்து போனோம். பசியையும் கழிப்பு உணர்வையும் அடக்கிக்கொண்டிருந்தோம். எல்லா இடத்திலும் ஈ மொய்த்தது போலச்சனம்.

ஒவ்வொருவரில் இருந்தும் கிளம்பிய துர்நாற்றம் அவரவர்க்கே  சகித்துக்கொள்ளவியலாத நிலை. இன்னொருவர் கிட்டவந்தால் மற்றவரால் தாங்கமுடியாத நிலை.

May-84.jpgதுணைவனையும் … மகனையும் எண்ணி எண்ணி மனது தளர்ந்துகொண்டிருந்தது….

கெட்ட சேதி வந்துவிடக்கூடாது என்கின்ற எண்ணம் கடந்து…. வரவுள்ள கெட்ட சேதியை தாங்கிக்கொள்ளவேண்டும் என மனது  அடிக்கடி தன்னைத்  தயார்ப்படுத்திக் கொண்டிருந்தது.

நாங்கள் இருந்த வளவின் முன்பக்கமாகவும் இடதுபக்கமாகவும் தெருக்கள் இருந்தன. தூரத்தூரவாக வீடுகள் தெரிந்தன… எல்லாவீடுகளும், வளவுகளும் சனங்களால் நிரம்பிவிட்டிருந்தன.

இரவுகளில் நிலாவும் நட்சத்திரங்களுமே உறவுகளாகின…. அவற்றோடு சேர்ந்து பழுத்துத் தொங்கும் பழங்களாய் வெளிச்சக்குண்டுகள்….

தேவாலயம் கடந்து போக…. தெருவின் ஓரங்களில், இடம்பெயர்ந்திருந்த சனங்கள் தங்களிடமிருந்த பாவனைப்பொருட்களை விற்றுக்கொண்டிருந்தார்கள்….

அவ்விடத்துக்கு போனால் யாராவது தெரிந்தவர்களைக் காணலாம். அப்படிக் கண்டால்… எங்காவது என் மகனைப் பார்த்தீர்களா எனக் கேட்கலாம்… இவ்வளவு நாட்கள் அவனைப் பிரிந்ததே இல்லை… பசிக்கும்போது என்ன செய்வான்…. எங்கே படுத்து உறங்குவானோ… என்றெல்லாம் மனது அந்தரித்தது……

நான் சேர்ந்திருந்த குடும்பத்து அம்மாவிடம் சொல்லிவிட்டு…. மெல்ல நடந்தேன்… யாரையும் உரசிக்கொள்ளாமல் தெருவில் நகரமுடியாதிருந்து.

May-200.jpgகளைத்துப்போன சனங்கள் தனியாகவும், குடும்பமாகவும், கூட்டமாகவும் அமர்ந்திருந்தார்கள்.

சாக்குருவி அகலத் திறந்த வாயுடன் அலைவது போன்ற உணர்வின் உறுத்தல் ஆட்கொண்டிருந்தது.

தெரிந்த ஆண்கள் சிலர் தோற்றம்மாறியிருந்தார்கள். என்னோடு வானொலியில் பணியாற்றிய ஒருவர், என்னைக்கண்டபோது…. பேசமுடியாமல் தலையை மட்டும் அசைத்தார். அவரது கோலம் மனதை வருத்தியது.

சனங்களைப் போலவே போராளிகளும் நடமாடிக்கொண்டிருந்தார்கள். தெரிந்த… பழக்கமான ஆண்பெண் போராளிகளைக் கண்டாலும் நின்று நிதானித்து கதைக்கக்கூடிய சூழ்நிலை இல்லாதிருந்தது.

தனித்துப்போன நிலையில்… கனத்துப்போன மனதுடன் கண்ணுக்கு தெரிந்தவர்களுக்கு புன்னகைத்துவைத்தேன்.

இப்போது ஒருபெரும் ஆலமரத்தடி. சனங்கள் மிக அதிகமாகத் தெரிந்தார்கள்.

தற்செயலாக அவளை அங்கு கண்டேன்.

அடிக்கடி என்னை தேடி வருபவள். அது அவளது கடமை. அதையும் தாண்டி நான் அவளையும், அவள் என்னையும் புரிந்து வைத்திருந்தோம். தன் பணியின் தன்மைகளை, அதில் ஏற்படும் நெளிவுசுழிவுகளை, இன்னும் பலவற்றை நாங்கள் பேசிக்கொள்வோம்.

“ அக்கா… எங்கை இருக்கிறியள்…. அண்ணை எங்கை…… “ என்று கைகளைப் பற்றி….நலம் விசாரித்தவளைப் பார்த்தேன்.

செம்மஞ்சள் நிறத்தில் ஒரு சுடிதாரும், நீலநிறத்தில் நீளக்காற்சட்டையும் அணிந்திருந்தாள். சத்தின்றி வெளிறிப்போன முகத்தில் வியர்வைபூத்திருந்தது.

இரண்டாவது தடைவையாக தாய்மையுற்றிருந்தாள். குழந்தைப் பேற்றை அண்மித்துவிட்டாள் எனப் புரிந்தது.

02.jpg“ கண்டமாதிரி செல் வருகுது…. இந்தநிலைமையில… அதுவும் தனியா ஏன் இதிலை….. “  கொஞ்சம் உரிமையெடுத்து, கடிந்தேன்.

“ இல்லையக்கா…. தெரியும் தானே…. ஒருவேலையா வந்தனான்…. போகப்போறன்…. நீங்கள் கவனம்…. அண்ணைக்கு ஒண்டும்நடக்காது… பயப்பிடாதேங்கோ…. போய் அங்கயே இருங்கோ…. திரியிறது தான் பயம்…..”

எனக்கு அறிவுறுத்தினாள்.

கருவைச் சுமந்தநிலையில் அவளும் அவளின் போராளித் துணைவனும் உடையார்கட்டுப் பகுதியில் காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பியதையும் நான் பார்த்திருந்தேன்.

இருவரும் விடைபெற்றோம்.

அவளது போராளித்துணைவன் இப்போது வேறுபணியில். இவள் இங்கே வேறுபணியில்.   கனத்துப்பருத்த இதயத்துடன், தங்கியிருந்த  மரத்தடிக்கே வந்துவிட்டேன்.

அதற்கு அடுத்தடுத்து வந்தநாட்களில் மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் என எல்லாஇடங்களையும் படையினர் எறிகணைகளால் பொழிந்து தள்ளினார்கள்.

ஓடி ஒளிவதற்கு இடமில்லை. உண்டியல்சந்தி……… முள்ளிவாய்க்கால்….. நந்திக்கடற்கரை  என ஓடினோம்.

உடல்கள் பலமிழந்து கண்கள் பழுத்துப்போய்விட்டன….. கால்கள் குச்சிகளாகி நடப்பதற்கு மறுப்புக்காட்டின….மரணம் எங்களுக்குள் நுழைந்து,  கிட்டத்தட்ட அரைப்பிணமாகிவிட்டார்கள் சனங்கள்.

கழுத்தில் கௌவிப்பிடித்துவிட்ட சிங்கத்தை பலமுள்ளவரை இழுத்துச் செல்லுமே சின்னஞ்சிறு மான்…. அந்த நிலையில் தான் இருந்தோம்.

போராளிகளை நானறிய யாரும் திட்டவில்லை.

“ இரவு பகலா ஓயவிடாம அடிச்சா… பிள்ளையளும் தான் என்ன செய்யிறது…. “ என கவலையோடு சொல்லிக்கொண்டுதான் சனங்கள் நகர்ந்தார்கள்.

சரியான சாப்பாடு இல்லாத நிலையிலும் காயப்பட்ட சனத்தைக் காப்பாற்றிக்கொண்டும், சனத்தின் காயங்களுக்கு  கட்டுப்போட்டுக்கொண்டும் இருந்த போராளிகளை என் கண்கள் கண்டதை நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.

இப்போது நடத்தப்படும் போர் என்பது… காட்டுமிராண்டித்தனமானது…. இது மிகவும் சூழ்ச்சிகரமாக….. தமிழ்ச்சனங்களின்மேல் அரசால் ஏவப்பட்டிருக்கிறது என்பது போகப்போக  எல்லோருக்கும் புரிந்தது.

நிறையப்பேர் இறந்துவிட்டார்கள். எஞ்சியிருப்பவர்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனப் பலரும் நினைத்திருக்கவேண்டும்.

okay-cc.jpgஅடித்துக்கொட்டும் பேய்மழையாய்…. குண்டுகளும் துப்பாக்கிச் சன்னங்களும் கொட்டத் தொடங்கிவிட்டன…..

உயிர்காக்க வேண்டி சனங்கள் ஓடத் தொடங்கிவிட்டார்கள்.

எல்லாமே மௌனித்துப் போனது….. முள்ளிவாய்க்கால் தமிழ்சனங்களின் மனங்களில் ஆறாத காயமாகிப்போயிருக்கிறது…..

காலத்தின் நகர்வில்…. எல்லோரும் எங்கெங்கெல்லாமோ விசிறப்பட்டோம். நான் வந்துவிழுந்த இடம் சுவிற்சர்லாந்து.

சுவிற்சர்லாந்தின் மிகப்பெரிய இரண்டாவது நகரமும், சர்வதேசமுக்கியத்துவம் கொண்டதுமான ஜெனிவாவில் ஒருபெரும் நிகழ்வு…..

முள்ளிவாய்க்கால் சனநெரிசலை நினைவுபடுத்தும் காட்சி. திரும்பிய இடமெங்கும் தமிழின் உரையாடல் காதில் ஒலித்தது.

“ அக்கா…. இஞ்சயா இருக்கிறியள்….. “ கைகளைப் பற்றிக்கொண்டாள் அவள். என்னுடைய அவளே தான்.

முன்னெற்றியில் இழையோடும் சில நரைமுடிகள் தான் புதிது. மற்றும்படி அப்படியே இருந்தாள் அவள்.

“ அக்கா… அண்ணை சுகமா இருக்கிறாரோ… வந்தவரோ…. “ என அக்கறையோடும் பெருகிவழியும் பேரன்போடும் கேட்டாள்.

பிறகு… அவளும் நானும் சனக்கூட்டத்தை விட்டு ஒரு மரத்தடியில் ஒதுங்கினோம்.

இன்னொரு அயல்நாட்டிலிருந்து ஜெனிவாவின் நிகழ்வுக்கு பேருந்தில் அவள் வந்திருந்தாள்.

பாயும் காட்டாறாய்…. பலவற்றைப் பேசினாள். அவள் பேசட்டும் என விட்டுக்கொடுத்து…. கேட்டுக்கொண்டிருந்தேன்.

“ உங்களைக் கண்டபிறகு ஒருதரம் என்ரை ஆளைக் கண்டனான் அக்கா…. ஒருநாளும் என்னட்டை அப்படிக் கதைக்கிறேல்லை… அண்டைக்கு… ‘பிள்ளையளுக்கு அம்மா கட்டாயம் தேவை…. கவனம்…. என்னைப்பற்றி கவலைப்படாதை…… காலம் நல்லமாதிரி மாறினால் நாங்கள் திரும்பவும் சந்திப்பம்……..ஒருவேளை நானில்லாம போனாலும்……நான் உன்னோடைதான் இருக்கிறன் எண்டு நினைச்சுக்கொண்டு………. பிள்ளைகளை வளர்த்தெடு ….எண்டு சொல்லிச்சுது….. தன்னை எதிர்பாக்க வேண்டாமெண்டும் சொல்லிச்சுது…. அவ்வளவும் தான்….. “

உதடுகள் துடிக்க…. அவளின் கண்கள் சிவந்தன.

அவளையும் மீறி அழப்போகிறாள் எனப் புரிந்தது.

“ அழவேண்டாம் பிள்ளை…. நான் தாங்கமாட்டன்…. “ அவளை அணைத்துக் கொண்டேன்.

அவள் தன்னைத் திடப்படுத்திக் கொண்டாள்……

“ இவர் நீங்கள் சின்னனாகப் பாத்த ஆள்… இவதான் நீங்கள் பாத்தநேரம்  வயித்தில இருந்த ஆள்…. இரண்டுபேரும் பெரியம்மாவுக்கு வணக்கம் சொல்லுங்கோ… “ என்றாள்.

தேன்தமிழில் வணக்கம் என்றார்கள்.  பிறகு நிகழ்வை வேடிக்கை பார்க்க தொடங்கினார்கள்.

“ சின்னனுக்கு தேப்பனை தெரியாது தானே… படத்தை வைச்சு ஏதோ கதைக்கும்…. தேப்பனிலை சரியான உயிர்…. பெடிப்பிள்ளை இப்ப கொஞ்சம் வளந்திட்டார்தானே…. நான் கவலைப்படக்கூடாதெண்டு நினைக்கிறார்….. “ என்றாள்.

பிறகும் பல விடயங்களை பேசினோம். பேற்றுக்காலம் அண்மித்துவிட்டது..

நகரமுடியாத சனநெரிசலில் அவளுக்கு குழந்தை பிறப்பதற்கான நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. அவளது சிறிய மகனும் இன்னும் இரண்டு தோழிகளும், அம்மாவும் அவளுடன் வந்தனர்.

கிபிர் விமானங்கள் இரண்டோ மூன்றோ தாழப்பறந்து கீச்சிட்டன……

குண்டுகள் விழுந்த அதிர்வு… அவள் நிலத்தில் கிடந்தாள். அம்மா அழுவது இலேசாகத் தெரிந்தது.

தோழிகள் காயப்பட்டுவிட்டனர். இவள் எப்படியோ அம்மாவுடனும் மகனுடனும் Zone 4 முகாமுக்கு வந்துவிட்டாள்.

படுத்த படுக்கையிலேயே கிடந்தாள். அம்மாதான் முகாமில் இராணுவத்தினருடனும், மருத்துவர்களுடனும் வாதாடி,  அவளை முகாமிற்கு வெளியே அரச மருத்துவமனைக்கு போக அனுமதி எடுத்தாள்.

வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது….. அவளுக்கு நினைவில்லை.

மயக்க நிலையிலேயே பெண்குழந்தை பிறந்தது.

எப்படியோ… இராணுவத்தினருக்கு அவளைப்பற்றிய தகவல்கள் கிடைத்துவிட்டன. வெளியேறிவிட இயலாத உடல்நிலை. மருத்துவ மனையிலேயே கண்காணிக்கப்பட்டு வந்தாள்.

ஒருநாள் அங்கு கடமையில் இருந்த…… இளகிய மனங்கொண்ட மருத்துவர் ஒருவரின் உதவியோடு, அவள் வெளியே வர முடிந்தது.

உடல்நிலை தேறமுடியாத நிலையில் போக்கிடமின்றி… குழந்தையோடு யாருமற்று, தனித்து   நின்றவளை….

“ பயப்பிட வேண்டாமக்கா…. நாங்கள் கடமைகளுக்காக முதலே இங்க வந்திட்டம்…. “

எனச் சொல்லிய முகம்தெரியாத இளைஞர்கள் பாதுகாத்தனர்.

ஒருவாறு அம்மாவின் தொடர்பு கிடைத்து…. வெளிநாட்டில் இருந்த, மைத்துனனுக்கு தகவல் சொல்லி…. ஓரிரு வாரங்களில்

அயல்நாடு வந்தாள்.

அங்கேயும் பாதுகாப்பற்ற நிலை. வெவ்வேறு பிரச்சனைகள் வெவ்வேறு வடிவங்களில் துரத்தின…. தெரிந்தவர்களிடம் கூட பழகுவதற்கு பயப்படவேண்டிய சூழலும் மனநிலையும்.

அதன்பிறகுதான் அவள் புலம்பெயர்ந்து வந்தாள்.

இப்படியே கதைசொன்னவள்…. தன்னுடன் நின்று, உயரிழந்தவர்களை… அவர்களின் குடும்பங்களைப் பற்றி கவலையோடு சொன்னாள்.

“ நாங்களெண்டாலும் போராட வந்தனாங்களக்கா…. எதையும் தாங்கத்தான் வேணும்…. ஆனா….எங்கட சனம் பாவம்…. சனம் கஸ்டப்படுறதைதான் தாங்கேலாம கிடக்கு…..பிள்ளையளுக்கும் எல்லாம் சொல்லித்தான் வளக்கிறன்…நானில்லாட்டிலும் எங்கட சனத்துக்கு எல்லாம் செய்யவேணும்……“

அவள் சொல்லிய அந்த வார்த்தைகள் மனதை எதுவோ செய்தன.

அவளின் போராளித் துணைவனுக்கு என்ன ஆயிற்று என்பது தெரியாது.

அவளைப் போல தங்கள் தேசத்திற்காக… போராடி… இழப்புகளையும் துயரங்களையும் தாங்கிக்கொண்டும் ஏற்றுக்கொண்டும் இன்னும் பலபேர் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு காலத்தின் சாட்சிகள்
 

இலங்கை அனுபவம் : புவிசார் அரசியல் போட்டியை கையாளுவதற்கான ஒரு அமெரிக்க படிப்பினையா? யதீந்திரா

http://www.puthinappalakai.net/2015/09/11/news/9575

இலங்கை அனுபவம் : புவிசார் அரசியல் போட்டியை கையாளுவதற்கான ஒரு அமெரிக்க படிப்பினையா?

Jathindra (2)

 

பலம்பொருந்திய சக்திகள் தங்களின் புவிசார் அரசியல் முரண்பாடுகளுக்காக இலங்கையை கையாளும் சூழலில்தான், தமிழர் தரப்பு தங்களின் (தமிழரின்) நலனை முன்னிறுத்தி இன்றைய சூழலை கையாள வேண்டியிருக்கிறது- புதினப்பலகைக்காக – ‘யதீந்திரா’

இலங்கை அரசியலை வெறுமனே சிங்கள மேலாதிக்கமாகவும் அதற்கு எதிரான தமிழர் போராட்டமாகவும் சுருக்கிப் பார்த்தால், இலங்கையின் அரசியல் நிலைமைகள் எந்தளவு சர்வதேச அரசியல் முக்கியத்துவம் உடையது என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் போகும்.

இன்று இலங்கையில் இடம்பெற்று வரும் விடயங்களை சர்வதேச உறவுகளின் பின்புலத்தில் விளங்கிக் கொள்வதாக இருந்தால், இரத்தம் சிந்தலின்றி, அதிகார சக்திகள் எவ்வாறு தங்களின் நலன்களை வெற்றிகொள்ள முடியும் என்பதற்கான ஒரு சிறந்த படிப்பினையாக இலங்கை விளங்குகின்றது.

இது பற்றி பார்பதற்கு முன்னர், புவிசார் அரசியல் என்றால் என்ன என்பதை பற்றியும் சிறு குறிப்பொன்றை பதிவு செய்வது பொருத்தமாக இருக்குமென்று எண்ணுகின்றேன்.

அரசியலை வெறும் இனமான உணர்வாகவும், கட்சியரசியலாகவும் சுருக்கிப் பார்ப்பதற்கு மட்டுமே பழக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் ஆர்வலர்களுக்கு, புவிசார் அரசியல் என்னும் சொற்பதங்கள் மிகவும் அந்நியமான ஒன்றாகவே இருக்கும்.

புவிசார் அரசியல் என்று தமிழில் குறிப்பிடும் சொற்கள் ஆங்கிலத்தில் ஒரு சொல் கொண்டே நோக்கப்படும்- அதாவது ஜியோபொலிட்டிக்ஸ் (Geopolitics).

நாடுகளின் அமைவிடங்களின் முக்கியத்துவம், எவ்வாறு சர்வதேச உறவுகளில் முரண்பாட்டையும், பதட்டங்களையும், மோதல்களையும் தோற்றுவிக்கின்றது என்பதையே பொதுவாக புவிசார் அரசியல் (Geopolitics) என்று அழைக்கப்படுகின்றது.

இந்த வகையில்தான் இலங்கையின் அமைவிடம், தெற்காசியாவின் அதிகாரமான (Regional Power) இந்தியாவின் உடனடி அயல்நாடாக இலங்கை இருப்பது, ஆசியாவின் அதிகாரமாக சீனா எழுச்சியடைந்து வருவது, அந்த அடிப்படையில் சீனா இலங்கையிலும் வலுவாக காலூன்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டமை, இப்படியான பல காரணங்களின் விளைவாகவே இலங்கையின் உள்ளக அரசியலானது, அதிகார சக்திகளின் கவனிப்புக்குரிய ஒன்றாக மாறியது.

இலங்கை காலனித்துவத்திலிருந்து விடுபட்ட பின்னர்  நிகழ்ந்த முதலாவது வெளியாரின் நேரடி தலையீடாக, இந்தியாவின் தலையீடு அமைகிறது. இந்தத் தலையீடு என்பது அன்றைய உலக ஒழுங்கின் கீழ் நிகழ்ந்துகொண்டிருந்த புவிசார் அரசியல் முரண்பாடுகளின் விளைவாகவே நிகழ்ந்தது.

அன்று, கொள்கை ரீதியாக சோவியத் முகாமுடன் இணைந்திருந்த இந்தியா, அதனுடைய பிராந்திய அதிகாரத் தகுதிநிலையை, அப்போதைய சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் உதாசீனம் செய்ததன் விளைவாக, இலங்கைக்கு ஒரு பாடத்தை புகட்ட நினைத்தது. அற்றிருந்த இந்திய பிரதமர் இந்திராகாந்தி உலகளவில் மிகவும் செல்வாக்கான தலைவராகவும், அதே வேளை துணிச்சலான தலைவராகவும் இருந்தார்.

ஆறு கோடி தமிழ் மக்களை கொண்டிருக்கும் இந்தியா, இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் பாராமுகமாக இருக்க முடியாது என்னும் ஒரு வாதத்தை கையிலெடுத்து, ஜே.ஆரின் குரல்வளையை நசிக்க முற்பட்டார் இந்திரா. இதன் விளைவாக அன்றிருந்த மிதவாத அணியான தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஆயுத விடுதலை அமைப்புக்கள் அனைத்தையும் இந்தியா தத்தெடுத்துக் கொண்டது. அவ்வாறு அன்று தத்தெடுக்கப்பட்டவர்களில் எஞ்சியிருப்பவர்கள்தான் இன்று ஒரு கூட்டமைப்பாக இருக்கின்றனர்.

அன்றிருந்த புவிசார் அரசியல் போட்டியில், இந்தியா அமெரிக்காவிற்கு எதிர்நிலையில் இருந்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் அன்றைய இலங்கையின் ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அமெரிக்க சார்பு, இந்திராகாந்தியை சினம்கொள்ளச் செய்தது. இதன் விளைவாக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த விடயங்களும் தமிழ் அரசியல் ஆர்வலர்களுக்கு தெரிந்ததே!

இது தொடர்பில் எனது முன்னைய பத்திகள் பலவற்றில் சுட்டிக் காட்டியிருக்கின்றேன். அவற்றை மீண்டும் இங்கு குறிப்பிட வேண்டிய தேவையில்லை என்றே எண்ணுகிறேன்.

அன்றிருந்த புவிசார் அரசியல் முரண்பாடுகளில் இலங்கை எவ்வாறு சிக்கிக் கொண்டது என்பதையும் அதன் விளைவாக பிராந்திய சக்தியான இந்தியாவை, இலங்கை பகைத்துக் கொண்டது என்பதையும் சுட்டிக் காட்டும் நோக்கிலேயே சில விடயங்களை பதிவுசெய்திருக்கின்றேன்.

இலங்கையின் நவீன அரசியல் வரலாற்றில் புவிசார் அரசியல் முரண்பாடுகளின் விளைவாக நிகழ்ந்த முதலாவது வெளியாரின் தலையீடாகவே மேற்படி இந்திய தலையீடு நிகழ்ந்தது.

2009இல் மூன்று தசாப்தங்களாக தெற்காசிய இராணுவ வலுச் சமநிலையில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியளவிற்கு, பலமான நிலையில் இருந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை புதியதொரு புவிசார் அரசியல் போட்டிக்கான களமாக மாறியது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியென்பது சிலர் கூறுவது போன்று வெறுமனே மகிந்தவின் வெற்றியோ அல்லது கோத்தபாயவின் வெற்றியோ அல்ல,  மாறாக அது பலம்பொருந்திய நாடுகளின் ஆதரவில் இலங்கை இராணுவம் பெற்றுக்கொண்ட வெற்றி.

2009இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போது, தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் பெருமளவிற்கு இந்தியாவிற்கு எதிரான பார்வையே மேலோங்கியிருந்தது. புலம்பெயர் தமிழ் அரசியல் அமைப்புக்களை பிரதிநிதித்துவம் செய்தவர்களின் நலன்கள் மேற்குலகுடன் பின்னிப்பிணைந்திருந்ததால், அவர்கள் இந்தியாவை விமர்சிப்பதன் ஊடாக தங்களின் தமிழ்த் தேசிய தகுதிநிலையை நிரூபிக்க முற்பட்டனர்.

ஆனால் இதுவரை வெளிவந்த எந்தவொரு அங்கீகாரமுள்ள ஆவணங்களிலும் இறுதி யுத்தத்தில் இந்தியாவின் பங்கு தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.  ஆனால் இறுதி யுத்தத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தினால் (Permanent People’s Tribunal) 2010இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற தமிழ் மக்களின் கொலைகளுக்கு, அமெரிக்காவும் பிரித்தானியாவும் பொறுப்புக்கூற வேண்டுமென்று அழுத்திக் கூறப்பட்டிருக்கிறது.

அமெரிக்க மற்றும் பிரித்தானிய அழுத்தங்களின் காரணமாகவே 27 நாடுகளை உள்ளடக்கியிருக்கும் ஜரோப்பிய ஒன்றியம் 2006இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு சர்வதேச பயங்கரவாத இயக்கமாக தடை செய்தது. மேற்படி ஜரோப்பிய ஒன்றியத்தின் தடையானது மகிந்த ராஜபக்சவின் யுத்தத்திற்கு உத்வேகமளித்தது. சிறிலங்கா இராணுவம், வன்னி நிலப்பரப்பின் மீது, தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை கூட பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்களை வழங்கியது. எனவே இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற அழிவுகளில் அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் பங்குண்டு, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியா பற்றி பேசுவதில் அலாதிப்பிரியம் காண்பிக்கும் தமிழ்த் தேசியவாதிகள் என்போர், இந்த விடயங்களை பற்றி வாய்திறப்பதில்லை. நான் இந்த விடயங்களை இந்த இடத்தில் குறிப்பிடுவதுகூட, அமெரிக்க எதிர் மனோபாவத்தின் விளைவாக அல்ல. ஏனெனில் தமிழர்கள் அமெரிக்காவை எதிர்த்து நிற்பதாலும் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. மாறாக, விடயங்களை விளங்கிக் கொள்வதற்கான ஒரு உசாத்துணையாகவே இவ்வாறான தகவல்களை பதிவு செய்திருக்கிறேன்.

ஒரு கேள்வி எழலாம், அவ்வாறாயின் இறுதி யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்பு இல்லையா? – இருந்தது, அது எப்டியானது என்றால், விடுதலைப் புலிகளை காப்பாற்ற இந்தியா விரும்பியிருக்கவில்லை ஏனெனில், இந்தியாவும் விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பு தொடர்ந்தும் இருப்பதை விரும்பவில்லை.

இது தொடர்பில் பேசுவோர் அன்றைய சூழலில் காங்கிரசுக்கு பதிலாக பி.ஜே.பி அரசாங்கம் இருந்திருந்தால் அவர்கள், விடுதலைப் புலிகள் தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாட்டை கடைப்பிடித்திருப்பார்கள் என்று சொல்வதுண்டு. என்னைப் பொறுத்தவரையில் அப்படி நான் கருதவில்லை. பி.ஜே.பி இருந்திருந்தாலும் நிலைமைகளில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. ஏனெனில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் அனுமதிப்பதில்லை என்பது ஒரு உலகளாவிய முடிவாக மாறியிருந்தது.

2010இல் நோர்வேயின் சமாதான பங்களிப்பு தொடர்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய அமெரிக்காவின் முன்னைநாள் உதவி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆமிரேட்ஜ், விடுதலைப் புலிகள் அமைப்பானது, உலக பயங்கரவாதத்தின் வகைமாதிரியாக இருந்தது, அமெரிக்காவை பொறுத்தவரையில் அது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல என்று குறிப்பிட்டார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன்கெரி, யுத்தம் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது தொடர்பில் எங்களுக்கு முன்னைய அரசாங்கத்துடன் உடன்பாடின்மைகள் இருப்பினும் கூட, கொலைகார பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளும் அவர்களால் விதைக்கப்பட்ட அச்சமும் பூண்டோடு அழிக்கப்பட வேண்டுமென்பதில் தாங்கள் (அமெரிக்கா) தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாக குறிப்பிட்டிருந்தார்.

இவை அனைத்தையும் திரட்டி சிந்தித்தால், விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அழிப்பதில், அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலகின் பங்களிப்பு என்ன என்பதை விளங்கிக் கொள்வதில் சிரமங்கள் இருக்காது.

மேற்குலகின் ஆதரவுடன் விடுதலைப் புலிகளின் இராணுவ வலிமை இலங்கைத் தீவிலிருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதியதொரு பிரச்சினை உருவெடுத்தது. இந்த பிரச்சினையின் விளைவுதான் தற்போது நாங்கள் எதிர்கொண்டிருக்கும் புதிய அரசியல் சூழ்நிலை.

மேற்குலகின் பலமான ஆதரவுடன் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டபோதும், அந்த வெற்றியின் பின்னர் மேற்குலகுடன் ஒத்தோடும் ஒருவராக மகிந்த செயற்பட்டிருக்கவில்லை. யுத்தத்தின் போது மகிந்த அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் சில வாக்குறுதிகளை வழங்கியதாகவும் ஆனால் அதனை வெற்றியின் பின்னர் காற்றில் பறக்கவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதன் உண்மைத் தன்மை பற்றி நானறியேன்.

ஆனால் யுத்த வெற்றியின் பின்னர், இலங்கைத் தீவை சீனாவின் கொல்லைப்புறமாக மாற்றும் வகையிலேயே மகிந்த ராஜபக்சவினது செயற்பாடுகள் அமைந்திருந்தன. இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு சவாலாக மாறியது.

இந்த இடத்தில் நாம் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவை நல்கிய அமெரிக்காவே பின்னர், யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தது. இலங்கையின் மீதான பொறுப்புக்கூறல் தொடர்பில் அழுத்தங்களை பிரயோகித்ததுடன், அதற்கான உலகளாவிய அரசியல் தலைமைத்துவத்தையும் வழங்கியது.

இந்த அடிப்படையில்தான் ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன. யுத்தத்தை தடுத்து நிறுத்தியும் தமிழ் மக்களின் உயிர்களை பாதுகாத்திருக்க முடியும்,  ஆனால் அதனை அமெரிக்கா செய்யவில்லை.  மாறாக, யுத்தத்தின் விளைவுகளை முன்வைத்து மகிந்த அரசாங்கத்தின் மீது மென் அழுத்தங்களை பிரயோகித்தது.

மகிந்தவின் மீதான மென் அழுத்தங்கள், அவர் மேலும் சீனாவை நோக்கிப் பயணிப்பதற்கே வழிவகுத்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் இவ்வாண்டு மகிந்த ராஜபக்ச, எவரும் எதிர்பார்க்காத வகையில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னால் அமெரிக்காவின் திரைமறைவு செயற்பாடுகள் இருந்திருக்கிறது என்பதை ஊகிப்பதும் கடினமான ஒன்றல்ல.

சீனாவின் முழுமையான செல்வாக்கிற்குள் இலங்கை விழுமாக இருந்தால், ஆசியா நோக்கிய அமெரிக்க முன்னெடுப்புக்கள் பெரிதும் பாதிக்கப்படும். இந்த விடயத்தை கருத்தில் கொண்டுதான் அமெரிக்கா அதனது மென் அதிகாரத்தை பிரயோகித்தது, இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையை மேற்கு நோக்கி வளைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

அமெரிக்கத் தலையீட்டின் விளைவாகவே இன்று ஒரு தேசிய அரசாங்கம் இலங்கையில் உருவாக்கியிருக்கிறது. 32 வருடங்களுக்கு பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

தமிழர் தரப்பின் எதிர்பார்ப்புக்களில் இந்த புதிய நிலைமைகள் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை தற்போதைக்கு கூற முடியாது. ஆனால் சீனாவின் செல்வாக்கு வளையத்திற்குள் இலங்கை முற்றிலுமாக விழுவதை தடுக்கும் வகையிலேயே ஒவ்வொரு நகர்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. இனியும் மேற்கொள்ளப்படும்.

சீனா ஆசியாவில் ஒரு மேலாதிக்க அதிகாரமாக (Regional hegemony) எழுச்சியடைந்து வருவதை தடுத்து நிறுத்துவதன் ஊடாகவே, அமெரிக்காவின் செல்வாக்கை இப்பிராந்தியத்தில் பேணிப் பாதுகாக்க முடியும்.  சீனாவின் எழுச்சிக்குள் தெற்காசிய நாடுகள் விழுவதை தடுத்து நிறுத்த வேண்டியது இந்தியாவினதும் தேவை. இந்த பொது ஆட்டத்திற்கான ஆடுகளத்தில் இலங்கையும் ஒரு அங்கமாகியிருக்கிறது.

சீனாவை கட்டுப்படுத்துதல் என்னும் நோக்கில் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் இலக்கு ஒரு நேர் கோட்டிலேயே சந்திக்கின்றது. இந்த அடிப்படையில்தான், ஆட்சி மாற்றம் ஒன்றின் ஊடாக, இலங்கையை சீனா நோக்கி நகர்த்த முற்பட்ட தெற்கின் சக்திகள் ஓரங்கட்டப்பட்டிருக்கின்றனர்.

இதிலுள்ள அரசியல் படிப்பினை முக்கியமானது. பல்கட்சி ஜனநாயக முறைமையை மிகவும் கச்சிதமாக கையாளுவதன் ஊடாகவும், அமெரிக்க நலன்களுக்கு எதிரான உள்ளுர் சக்திகளை முடக்க முடியும் என்னும் படிப்பினை, இலங்கை அனுபவத்தின் வாயிலாக கிடைக்கப் பெற்றிருக்கிறது.

ஆனால் நான் இங்கு குறிப்பிட்டிருக்கும் புவிசார் அரசியல் முரண்பாடுகளினால் வெளியார் தலையீடு செய்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழர் பிரச்சினையை மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது என்பதை நாங்கள் கவனிக்க வேண்டும். இந்தியாவும் சிங்கள மேலாதிக்கத்திற்கு எதிராக எழுச்சியுற்று வந்த தமிழ் இளைஞர்களின் போராட்டத்தை தனது புவிசார் அரசியல் முரண்பாடுகளுடன் பிணைத்து, அன்றைய இலங்கையை கையாண்டது.

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் விளைவுகளை வைத்து அமெரிக்கா இன்றைய இலங்கையை கையாளுகின்றது. இவ்வாறு பலம்பொருந்திய சக்திகள் தங்களின் புவிசார் அரசியல் முரண்பாடுகளுக்காக இலங்கையை கையாளும் சூழலில்தான், தமிழர் தரப்பு தங்களின் (தமிழரின்) நலனை முன்னிறுத்தி இன்றைய சூழலை கையாள வேண்டியிருக்கிறது.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

பா.செயப்பிரகாசத்தின் ஈழக் கதவுகள் பட்டுத் தெறித்த சில குறிப்புக்கள்

http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=651&Itemid=60


பா.செயப்பிரகாசத்தின் ஈழக் கதவுகள் 

பட்டுத் தெறித்த சில குறிப்புக்கள்

கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறது ஈழம். 
வியட்நாம் அழைத்ததா? நாம் போனோம். க்யூபா கூப்பிட்டதா? நாம் போனோம், பாலஸ்தீனம் அழைத்ததா போனோம். பூமிப் பரப்பில் கொடூரம் விதைக்கப்படும் எந்த மண்ணும் அழைக்காமலே, மானுடநேயராய் குரல் தந்தோம்.
கூப்பிடாத குரலுக்கு நாமொரு சாட்சியாக நடந்தோம்.
ஈழம் அழுது அழுது கூப்பிட்டபோதும் கேட்காத காதுகள், இரக்கமில்லா இதயத்துடன் நின்றோம். போய் இறங்கிய போது கூட, ஆப்பம் பகிர்ந்து கொடுத்த அடாவடிக் குரங்காய் நடந்து கொண்டது இந்தியா.

(ஈழக்கதவுகள் - ப.ம் - 9)

01.

தோழர் பா.செயப்பிரகாசம் இப்படியொரு நூலை எழுதப்போவது பற்றி முன்னரே என்னிடம் கூறியிருந்தார். பின்னர் ஒரு முறை கதைக்கும்போது பிரசுரிப்பதில் சில சிக்கல்கள் நிலவுவதாகவும் பலருடன் இது பற்றி பேசிவருவதாகவும் குறிப்பிட்டார். பா.செ இந்த நூல் பற்றி குறிப்பிட்ட காலத்திலிருந்தே அதன் வரவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தவர்களில் நானும் ஒருவன். தமிழகத்தின் தேர்ந்த இலக்கியவாதிகளில் ஒவரான பா.செயப்பிரகாசத்தின் ஈழம் பற்றி மனப்பதிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை பார்ப்பதுதான் எனது ஆர்வமாக இருந்தது. முன்று தினங்களுக்கு முன்னர்தான் இந்த நூல் எனது பார்வைக்கு கிடைத்தது இதனை படிப்பதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தேனோ அந்தளவு இது பற்றி எனது எண்ணங்களை பதிவு செய்ய வேண்டுமென்பதிலும் ஆர்வமாக இருந்தேன்.
 
02.
பா.செ அவர்களுக்கு இவ்வாறானதொரு நூலை எழுதுவதற்கு பின்புலமாகவும் வாய்ப்பாகவும் எந்த நிகழ்வு இருந்ததோ அதே நிகழ்வுதான் அவருக்கும் எனக்கும் இடையிலான தோழமையின் தொடக்கமாகவும் இருந்தது. 2002 மானுடத்தின் தமிழ் கூடல் நிகழ்வில் பங்கு கொள்ளும் போது எனது செயல்வெளிக்கு அப்பால் எவருடனும் தொடர்பில்லாத ஒருவனாகவே நான் நிகழ்வில் பங்கு கொண்டேன். அந்த வகையில் புதிய இலக்கிய, கருத்தியல் நன்பர்கள் பலரை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை 'மானுடத்தின் தமிழ் கூடல்' என்னைப் போன்ற பலருக்கும் வழங்கியது. என்னளவில் இது இன்னொரு வகையிலும் முக்கியமானது என்பதை நான் சொல்லியாக வேண்டும். உண்மையில் மானுடத்தின் தமிழ் கூடலுக்கு பின்னர்தான் நான் தெளிவானதொரு அரசியல் நிலைப்பாட்டுடன் சிந்திக்கத் தொடங்கினேன் எனலாம். அப்பொழுதெல்லாம் மிகவும் சலிப்புத்தரக் கூடிய வகையிலான நாசிசம், பாசிசம் குறித்த உரையாடல்களால் குழம்பிக் கிடந்தேன். என்னளவில் அதனை தடுமாற்றங்களின் காலமாக இருந்தது.

இப்படியொரு சந்தர்பத்தில்தான் பா.செயப்பிரகாசம் எனக்கு அறிமுகமானார். தமிழகத்தலிருந்து பா.செ உடன் இன்குலாப், திருமாவளவன், புகழேந்தி மற்றும் ரொட்ஸ்கி மருது ஆகியோர் வந்திருந்த போதும் பா.செயும் இன்குலாப்பும்தான் எனது ஈடுபாடு சார்ந்து நெருங்கக் கூடிவர்களாக இருந்தனர். உண்மையில் அப்போது தோழர் பா.செய்பிரகாசம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. இன்குலாப்பை மட்டுமே அறிந்திருந்தேன் அவரது சில கவிதைகளைப் படித்திருந்ததுடன் அவரது புரட்சிகர அரசில் நிலைப்பாடு பற்றியும் அறிந்திருந்தேன். பின்னர்தான் அறிந்து கொண்டேன் பா.செயப்பிரகாசம், கி.ராஜநாராயணனுக்கு பின்னர் கரிசல் இலக்கியத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் ஒரேயொரு தமிழக இலக்கியவாதியென்று. பா.செ பற்றி கதைத்துத்துக் கொண்டிருக்கும் போது எனது கருத்தியல் நன்பரொருவர் சொன்னார், அந்த காலத்தில் பா.செ யின் எழுத்துக்களை தேடித்தேடி வாசித்ததாக, அந்தளவிற்கு மிகவும் அற்புதமாக கிராமத்தை சிறுகதையில் கொண்டுவருவார், ஆனால் ஒரு கட்டத்துடன் அத்தகைய படைப்பாற்றலிலிருந்து அவர் விலகிக் கொண்டது போல் தெரிகிறது என்றார். பா.செயுடனான தொடர்புகள் அதகரித்த பின்னர் அவரது அரசியல், கருத்தியல் நிலைப்பாடுகள் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள முடிந்தது. அன்று மானுடத்தின் தமிழ் கூடலில் தொடங்கிய தோழமை இன்றுவரை தொடர்கிறது. ஆரம்பத்தில் கடிதம் மூலம் அவ்வப்போது பேசிக் கொண்டோம். இப்போது இணையத்தில் மூலம் அடிக்கடி தொட்டுக் கொள்கின்றோம். ஆனாலும் கடிதமூலம் பேசிக் கொள்வதில் இருக்கும் உயிரோட்டமான பிணைப்பு இணையத்தில் இருப்பதில்லை. எல்லாவற்றிலும் விரைவை எதிர்பார்க்கும் சூழலில் இணையம் தவிர்க்க முடியாததாக மாற்றிவிட்டது.

03.
'மானுடத்தின் தமிழ் கூடல்' 2002 அக்டோபர், 19 தொடக்கம் 22 வரையாக ஜந்து நாட்கள் இடம்பெற்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு பா.செ தமிழர் தேசத்தில் கழித்த காலத்தின் அவதானங்களை இந்த நூல் மூலம் தமிழகத்திற்கு சொல்லியிருக்கிறார். எனது பார்வையில் பா.செயின் 'ஈழக் கதவுகள்' ஏற்கனவே தமிழகத்தின் பெரும் ஊடகங்களும், பார்ப்பனவாத சிற்றிதழ்களும் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து கட்டமைத்துவரும் அபிப்பிராயங்களின் மீதான ஒரு தலையீடாக அமையக் கூடும். பா.செயின் நோக்கம் கூட அதுவாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். சமீபத்தில் முனைவர் அரசும் தனது நேர்காணலொன்றில் ஈழப் போராட்டத்தை அங்குள்ள பெரும்பாலான ஊடகங்கள் பாசிசத்தின் பிரச்சனையாகவே பார்க்க முற்படுவதாகவும், அதற்கு பெரும்பாலான ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கையில் இருப்பதே காரணமென்றும் குறிப்பிட்டிருந்தார். எனது முன்னைய  குறிப்பொன்றிலும் இது பற்றி குறிப்பிட்டிருக்கிறேன் (பார்க்க எனது நாட்குறிப்பிலிருந்து – 02) இந்த இடத்தில் தமிழகம் குறித்த சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.

தமிழக மக்கள் ஆரம்பத்தில் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து பெரியளவில் கரிசனை கொண்டிருந்ததாகவும், ஆனால் ராஜீவ் காந்தி தொடர்பான அந்த துன்பியல் சம்பவத்திற்கு பின்னரே தமிழகத்தின் ஈழம் குறித்த ஆதரவு குறைந்ததாகவும் கூறப்படுவதுண்டு. என்னளவில் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றென்றே சொல்வேன். ஒரு முறை ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ஒருவர் காலச்சுவடு போன்ற பத்திரிகைகளை சிலர் ஈழத்தமிழர் தேசியத்திற்கு எதிரானது, போன்று கதைக்க முற்படுகின்றனர் இவர்களுக்கு தெரியாது ராஜீவ் விடயத்திற்கு முன்னர் அவர்கள் பெரிய நேச சக்தியாகத்தான் இருந்தனர் என்றார். உண்மையில் இது பற்றி எனக்கு பெரிதாக தெரியாது ஆனால் தமிழக ஆதரவுத்தளம் குறித்து என்னிடம் சில பொதுவான அபிப்பிராயங்கள் உண்டு. 
                           
ஈழ விடுதலைப் போராட்டத்தை பொருத்தவரையில் அதன்  ஆரம்ப காலத்தில் தமிழகம் பெரியதொரு பின்தளமாக இருந்ததும், பின்னர் இந்தியா தனது நலன்களில் இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்தை அணுகியதன் விழைவாக 1989களின் இறுதியில்; போராட்டத்தின் பின்தளம் ஜரோப்பாவை நோக்கி நகர்ந்ததும் வரலாறு.  ஆனால் இந்தியாவைப் பொருத்தவரையில் அதன் இலங்கை விவகாரங்கள் மீதான தலையீடானது, பெருமளவிற்கு தமிழ் நாட்டை மையப்படுத்தியதாகத்தான் இருந்தது. இது தொடர்பில் இந்திய அரசின் கொள்கைவகுப்பு மட்டங்களிலிருந்து பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. இலங்கை எவ்வாறு தனது இனத்துவப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளும் என்பது இந்தியாவிற்கு சம்மந்தம் இல்லாத விவகாரம் அல்ல. ஜே.ஆர்.ஜெயவர்தன இனப்பிரச்சனையை எவ்வாறு கையாள்கிறார் என்பதில் ஆர்வம் காட்டுவதற்கு ஜந்து கோடியே ஜம்பது இலட்சம் தமிழர்களைக் கொண்ட தமிழ் நாட்டை தனது அங்கமாக வைத்திருக்கும் இந்தியாவிற்கு சட்டபூர்வமான ஈடுபாடுள்ளது, இலங்கை அரசாங்கம் தமிழர்கள் தொடர்பாக கடுமையான கொள்கைகளை கடைப்பிடித்தால் தமிழ் நாட்டில் பாரிய அகதிப்பிரச்சனை தோன்றலாம், ஈழத் தமிழர் பிரிவினை அரசியல் திராவிட வாதத்தையும் இணைத்துக்கொண்டு எழுச்சி பெறலாம் என்றெல்லாம் இந்தியா நியாயவாத உரையாற்றியது. இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் இந்தியா எந்த தமிழகத்தை தனது பிராந்திய விஸ்தரிப்புவாத நலன்களை மறைக்க ஆதாரம் காட்டிதோ, மறுபுறமாக சிங்கள பெரும்தேசிவாத சக்திகளும் ஈழத் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்கும், தொடர்வதற்கும் அதே தமிழகத்தையே காரணம் காட்டியது. சிங்களவர்கள் திராவிடத்தினுள் ஒரு சிறுபாண்மையினராக உள்ளனர். அவர்கள் திராவிடப் பெரும்பான்மைக்கு எதிராக, தமது இருப்புக்கான போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதே சிங்கள ஆளும்வர்க்கத்தின் வாதமாக இருக்கிறது. இவ்வாறான கருத்துநிலை வெறுமனே அரசியல்வாதிகளுடன் மட்டுப்பட்ட ஒன்றல்ல பெருமளவு சிங்கள புலமையாளர்களும் இந்த விடயத்தில் குடிகொண்டிருக்கின்றனர் (மைக்கல் றொபேட்ஸ், சிங்கள தேசியவாதம் - 2001). இவ்வாறான வாதங்களுக்கு தமிழக பார்பனிய சக்திகளும் முண்டுகொடுத்து வந்தன. இந்தப் போக்கு இன்றுவரை தொடர்கின்றது. 

04.
இங்கு திராவிட அரசியல்வாதம் குறித்து மிகையான வாதங்கள் இருப்பினும், உண்மை என்னவென்றால் ஈழவிடுதலைப் போராட்டம் தொடர்பான தமிழக ஆதரவென்பது பெருமளவிற்கு கலாசார மயப்பட்டதேயன்றி அரசியல்மயப்பட்டதல்ல. ஈழத்தமிழர் அரசியல் ஆயுதப்போராட்டத்தை நோக்கி நகர்ந்ததற்கான குறிப்பாக தமிழர் தேசிய அரசியல் தனிநாட்டுக் கோரிக்கையை நோக்கி நகர்ந்தற்கான தோற்றுவாய்களை நாம் திராவிட அரசியலில்  தேடமுடியாது. அது முழுக்கவும் சிங்கள இனவாதத்துடனும், சிங்கள பெருந்தேசியவாதத்துடனும் தொடர்புபட்டதேயன்றி தமிழக அரசியலுடன் தொடர்புபட்டதல்ல. வேண்டுமானால் தமிழக அரசியல் இதில் ஒரு துணைக் காரணியாக இருக்கக் கூடும். குறிப்பாக 1948களுக்குப் பின்னர் திராவிட அரசியலானது பிரிவினைவாதத்திலிருந்து விலகி (பார்ப்பனியர்களால் வழிநடத்தப்படும்) இந்திய மத்திய அரசின் கொள்கைநெறிக்குள் அடங்கிப்போயின. தமிழகத்தின் பிரதான மரபுவழி திராவிட அரசியல் கட்சிகளான அ.இ.அ.தி.மு.க வும் தி.மு.க வும் ஒரு பெரிய சமஸ்டி அரசுக்குள் தாம் ஒரு பிரதேச கட்சிகள் மட்டுமே என்ற நிலைப்பாட்டுடன் தம்மைச் சுருக்கிக் கொண்டன. ஆனால் தமிழகத்திற்கும் நமது சூழுலுக்குமான கலாச்சார ரீதியான தொடர்பு மிகவும் பலமானதுதான். ஈழத்தமிழர் தேசிய விடுதலைப்போராட்டம் முனைப்புப் பெற்ற வேளையில் அக்கலாச்சார ரீதியான உறவுகளே ஓர் அரசியல் ஆதரவுத்தளமாக பரிணமித்தது என நான் கருதுகின்றேன். 
 
இந்த பின்னணியில் தமிழகத்தின் புரட்சிகர சக்திகளும், தமிழ்த் தேசியவாத சக்திகளும் ஈழவிடுதலையின் ஆதரவு சக்திகளாக தொழிற்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த ஆதரவுத்தளத்தை பொருத்தவரையில் இதில் ராஜீவ் காந்திக்கு முன், பின் என்று பிரிக்க முடியுமென நான் நினைக்கவில்லை. அவை எப்போதுமே ஒரே மாதிரியாகத்தான் இருப்பது போல் தெரிகிறது. வேண்டுமானால் சிறிது காலம் அவைகள் மௌனம் சாதித்திருக்கலாம். ஆனால் தமிழகத்தின் பெருவாரியான மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் ஈழவிடுதலை குறித்த ஆதரவானது பெரியளவு நாம் பிரமிக்கும் நிலையில் இல்லை. இதற்கு சிலர் தமிழ் மக்களின் மனோபாவத்தையும் சமூக உருவாக்கத்தையும் காரணங்களாகச்  சொல்லுகின்றனர். இது பற்றி இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஏ.பி. வெங்கடேஸ்வரன் கூறும் விடயம் இந்த உரையாடலில் மிகுந்த முக்கியமானது எனலாம்.  "ஈழத்திற்கு பதிலாக வங்காளியரைச் சார்ந்து அல்லது பஞ்சாபியரைச் சார்ந்து ஈழம் போன்றதொரு சிக்கல் தோன்றியிருக்குமானால் இந்தியாவில் மீண்டும் ஒரு வங்கப் போர் தொடங்கியிருக்கும்" (Hindu April,26, 1987)

05.
இன்று ஈழவிடுதலைப் போராட்டம் தொடர்பாக பேசும் குறிப்பிடத்தகு இலக்கியவாதிகளில் பா.செயப்பிரகாசம் முக்கியமானவர். தமிழகத்தின் மரபுசார் இடதுசாரிகள், பின்நவீனத்துவ வாதிகள் என சிலர் ஈழப் போராட்டம் தொடர்பாக பல்வேறு குழப்பகரமான புரிதல்களை சொல்லிவரும் சூழலில்தான் பா.செ இப்படியானதொரு நூலை வெளிக்கொண்டு வந்திருக்கின்றார்.

"மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டில் எங்களுக்குப் பல சாளரங்கள் திறந்தன. அதன் வழி தெரிந்த ஒரு காட்சி - ஈழப் போராட்டம் பற்றி இங்குள்ள இதழ்கள், தொலைக்காட்சி, அறிவாளர்கள் உண்மை பேசவில்லை என்பது. இன்னுமொன்று உண்மை தேடாத மொட்டை மூளையாளர்கள் உலககெங்கிலும் இருக்கிறார்கள் என்பது. நேரடியாய் நாங்கள் ஈழத்தில் கால் வைத்த போது இந்த அறிவு வங்கிகளின் கற்பனை முடிந்து போயிருந்ததைக் கண்டோம்." 
(ஈழக்கதவுகள் ப.ம் 12)

ஒரு எழுத்தாளன் என்பவன் யார்? ஒரு போராட்ட சூழலில் ஆகக் கூடியது அவன் என்ன செய்ய முடியும்? என்பவற்றுக்கு தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு வாழும் சாட்சியாக இருக்கின்றார் பா.செயப்பிரகாசம். அந்த வகையில் ஈழத்து எழுத்தாளர்களில் சிலர் கூட அவரிடமிருந்து கற்றுக் கொள்ள ஏராளமுண்டு. எழுத்து பெரிதாக சாதித்துவிடும் என்று நான் ஒருபோதும் நம்பியதில்லை. லூசுன் சொல்லுவது போன்று புரட்சிக்கு புரட்சியாளர்கள்தான் தேவை. ஆனால் எழுத்தாளர்கள் போராட்டத்தின் நியாயங்களை சொல்ல முடியும், அதன் பக்கபலமாக தொழிற்பட முடியும். என்னளவில் அவ்வாறு செயலாற்றும் போதுதான் ஒரு எழுத்தாளன் முழுமை பெறுகிறான் என்பேன். உலகு முழுவதும் ஒடுக்கு முறைக்கு எதிரான பேராட்டங்களின் போதெல்லாம் பல எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், கலைஞர்கள் அவ்வாறுதான் செயலாற்றியிருக்கின்றனர். எங்கெல்லாம் ஒடுக்கு முறைக்கு எதிரா மக்கள் கிளந்தெழுகின்றார்களோ அங்கெல்லாம் அவ்வாறானவர்களின் சிந்தனைகள் உயிர்த்தெழுகின்றன. அதே வேளை எல்லாக் காலங்களிலும் ஆதிக்க சக்திகளின் அடிவருடிகளாக, ஊதுகுழல்களாக செயற்படுபவர்களும் உண்டு. அவ்வாறானவர்களே அதிகம். 

ஒவ்வொரு ஆதிக்க சக்தியும் (கிராம்ஸி) தனக்கான சொந்த புத்திஜீகளை உருவாக்கிக் கொள்கின்றன என்பதுதான் வரலாறு நெடுகிலும் நாம் கண்டுவரும் உண்மை. என்னளவில் நான் அவ்வாறானவர்களை இரண்டு வகையில் பார்க்கின்றேன். ஒடுக்கும் சக்திகளை நேரடியாக ஆதரித்து அவர்களுக்காக சிந்திக்கும் அறிவாளர்கள், மற்றையவர்கள் எல்லைகளை கடந்து சிந்திப்பதாக கதை சொல்பவர்கள். அவ்வாறானவர்கள் இன, வர்க்க வரையறைக்குள் சிந்திக்க முடியாதென கூறி மறைமுகமாக ஆதிக்க கருத்தியல்வாதிகளுக்கான வெற்றிடங்களை உருவாக்கிக் கொடுப்பவர்கள். ஒரு எழுத்தாளன் வாழும் காலத்தில் தனது கண்னுக்கு முன்னர் நிகழும் ஒடுக்குமுறைகள் குறித்து எதிர் குரல் எழுப்பாமல் நாங்கள் எல்லைகளை தாண்டி மானுடவாதம் பேசப் போகிறோம் என்பதெல்லாம் சுத்த பம்மாத்து, ஒரு வகையில் நழுவி ஓடும் வாதம். அந்த வகையில் பா.செயப்பிரகாசம் ஒரு உயிர்ப்புநிலை எழுத்தாளராக (Organic Writer) தெரிகின்றார். 

"எங்கெங்கோ காணாமல் போன சிதறடிக்கப்பட்ட வாழ்க்கையை அந்த மக்கள் இனி ஒன்று கோர்க்க வேண்டும். அதற்கு ஜம்பது, நூறு ஆண்டுகள் எடுக்கலாம். எவ்வளவோ முட்டியும் முயன்றும் பார்த்தும் சிலரது வாழ்வு மீட்டெடுக்கப்பட முடியாமல் போகலாம். வாழ்ந்தும் வாழாமல் அலைகிற அவர்களின் கதைகள் எதிர்வரும் தலைமுறையினருக்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாய் சொல்வதற்கு நீளும்" 
(ஈழக்கதவுகள்,ப.ம் - 13)

பிற்குறிப்பு:
இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் Organic Writer என்ற கருத்து இத்தாலிய மாக்சிய சிந்தனையாளர் கிராம்ஸியின் Organic Intellectual  என்ற கருத்திலிருந்து நான் உருவாக்கியதாகும். பொதுவாக புரட்சிகரமான குறிப்பாக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் போது அதில் தம்மளவில் பங்கு கொள்ளும் அதன் நியாயத்திற்காக போராடும் புத்திஜீவிகளே கிராம்ஸியின் வரையறையில் Organic Intellectual என்று அழைக்கப்படுகின்றனர் ஆனால் இந்த வரையறையை புரட்சிகர சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்டு சிந்திக்கும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின்போது தமது எழுத்துக்களால், படைப்புக்களால் அதனுடன் இணைந்து நிற்கும் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் போன்றவர்களுக்கும் பொருத்த முடியும். அவ்வாறு கையாளும் போது நாம், Organic Writer, Organic Poets போன்ற கருத்துக்களில்; பிரயோகிக்க முடியுமென்பது என்பது எனது கருத்து.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)

பா.செயப்பிரகாசம்

https://www.jeyapirakasam.com/2019/05/blog-post_84.html